ஆஸ்திரேலியாவில் இருந்து மீட்கப்பட்ட சிலைகள் கோவில் நிர்வாகிகளிடம் ஒப்படைப்பு
dgp jayanth murali hand overed idols
தமிழக கோவில்களிலிருந்து திருடப்பட்டு வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட புராதான சிலைகளை மீட்டு தமிழ்நாட்டிற்கு கொண்டு வர சிலை திருட்டு தடுப்புப்பிரிவு காவல்துறையினர் டிஜிபி ஜெயந்த்முரளி உத்தரவின் பேரில், ஐஜி தினகரன் மேற்பார்வையில் ட்டபூர்வமான நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்.
அதன்படி ஆஸ்திரேலியா நாட்டில் உள்ள அருங்காட்சியகங்களிலிருந்து அருள்மிகு துவாரபாலகர் கற்சிலை இரண்டு அருள்மிகு சம்பந்தர் மற்றும் அருள்மிகு குழந்தை சம்பந்தர் உலோகச்சிலைகளும், ஆகிய அதேபோல் அமெரிக்காவில் அருங்காட்சியகங்களிலிருந்து நடராஜர், நந்திகேஷ்வரர், கங்காலமூர்த்தி, விஷ்ணு என்ற வரதராஜபெருமாள், ஸ்ரீதேவி என்ற பார்வதி, சிவன் மற்றும் பார்வதி (ஒரே பீடத்தில்) ஆகிய உலோகச்சிலைகளும், ஆக மொத்தம் 10-சிலைகள் கடந்த 05.06.2022ம் தேதி தமிழகம் கொண்டுவரப்பட்டன.
இவற்றில் கடந்த 06.06.2022ம் தேதி, ஆஸ்திரேலியா நாட்டிலிருந்து மீட்கப்பட்டுள்ள நான்கு சிலைகளில் இரண்டு துவாரபாலகர் கற்சிலைகளை தென்காசி மாவட்டம், அத்தாளநல்லூர் மூன்றீஸ்வரமுடையார் திருக்கோவில் செயல்அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டது. அதே போல கடந்த 8.6.2022ம் தேதி சம்பந்தர் உலோகச் சிலையினை நாகப்பட்டினம், சாயவனேஷ்வரர் திருக்கோவில் செயல்அலுவலரிடம் ஒப்படைக்கப் பட்டன. மேலும் அமெரிக்காவிலிருந்து மீட்கப்பட்டுள்ள 6 -சிலைகளில் கடந்த 8.06.2022ம் தேதி நடராஜர் உலோகச்சிலை தஞ்சாவூர், புன்னை நல்லூர் கைலாசநாதர் கோவில் செயல் அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டடன. அதே நாளில் சிவன் பார்வதி உலோகச்சிலையை தஞ்சாவூர், வான்மிகிநாதர் திருக்கோவில் செயல்அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து நேற்று 17.06.2022ம் தேதி திருநெல்வேலி மாவட்டம், ஆழ்வார்குறிச்சி கிராமத்தில் உள்ள நரசிங்கநாதர் திருக்கோவிலில் திருடுபோன நந்திகேஸ்வரர் மற்றும் கங்காளமூர்த்தி ஆகிய இரண்டு உலோகச்சிலைகள் அமெரிக்காவிலிருந்து மீட்கப்பட்டு சிலை திருட்டு தடுப்பு பிரிவு, காவல்துறை டிஜிபி ஜெயந்த் முரளி, ஐஜி தினகரன், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மலைச்சாமி முன்னிலையில் கோவில் செயல் அலுவலர் கண்ணதாசனிடம் ஒப்படைக்கப்பட்டன. ஆஸ்திரேலியா நாட்டிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை சம்பந்தர் உலோகச்சிலையானது எந்த கோவிலில் திருடப்பட்டது என்பது சம்பந்தமாக விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.