சென்னை, ஆவடி காவல் ஆணையரக மோப்ப நாய்ப்படை பிரிவிற்கு பிறந்து 4 மாதங் களான மோப்ப நாய் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது.
சென்னை, ஆவடி காவல் ஆணையரகம் தொடங்கப்பட்டு அங்கு புதிய மோப்பநாய்ப்படை உருவாக்கப்பட்டது. முதற்கட்டமாக சென்னை நகர காவல்துறையில் இருந்து மூன்று துப்பறியும் மோப்ப நாய்கள் ஆவடி காவல் ஆணையரகத்துக்கு அனுப்பப்பட்டன. அவற்றில் 2 நாய்கள் வெடிகுண்டு கண்டறிவதற்கும், இன்னொரு நாய் குற்ற வழக்குகளில் தடயங்களை கண்டறிவதற்கும் பயன்படுத்தப்படுகின்றன. இந்நிலையில் கடந்த ஆண்டு மே மாதம் மேலும் 2 மோப்ப நாய்கள் ஆவடி காவல் ஆணையரகத்தில் சேர்க்கப்பட்டன.
இவற்றில் கடந்த டிசம்பர் மாதம் டோனி என்ற துப்பறியும் மோப்ப நாய் காலமாகி விட்டது. அதனைத் தொடர்ந்து நேற்று 4 மாதங்கள் வயதுடைய டாபர்மேன் வகை இன நாய் ஆவடி காவல் ஆணையரகத்தில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது. இந்த நாய்க்கு ‘கிகி’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த வகையில் ஆவடி காவல் ஆணையரக துப்பறியும் மோப்ப நாய் படைபிரிவில் 3 டாபர்மேன் மற்றும் 2 லேபர்டா ரெட்ரிவர் உள்பட மொத்தம் 5 மோப்ப நாய்கள் உள்ளன. ஆவடி காவல் ஆணையரகத்தில் இதுவரை 29 குற்ற வழக்குகளிலும், 14 கொள்ளை வழக்குகளிலும், எதிரிகளை கண்டறிந்தும் விஐபி முக்கிய பாதுகாப்பு பணியிலும், நாச வேலை தடுப்பு சோதனையிலும், இந்த நாய்கள் சிறப்பாக பணியாற்றிவருவது குறிப்பிடத்தக்கது.