சென்னை, ஆவடி காவல் ஆணையரகத்தில் பணியாளர்கள் மதிய உணவு அருந்தும் அறையை கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் இன்று திறந்து வைத்தார்.
சென்னை ஆவடி காவல் ஆணையரகம் தொடங்கப்பட்டதில் இருந்து அங்கு கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ள சந்தீப்ராய் ரத்தோர் பல்வேறு நலத்திட்டப் பணிகளை செய்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக ஆவடி காவல் ஆணையரகத்தில் பணியாளர்கள் நலன் கருதி தனியார் நிறுவனங்களில் உள்ளது போன்று ‘மதிய உணவு அருந்தும் அறை’ அமைக்க சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவிட்டார்.
அதன்படி ஆவடி காவல் ஆணையரகத்தில் 911 சதுர அடி கொண்ட லஞ்ச் அறை அமைக்கப்பட்டது. ஒரே சமயத்தில் 150 ஊழியர்கள் வரை அமர்ந்து சாப்பிடும் வகையில் மேஜைகள், நாற்காலிகள், தண்ணீர் வசதியுடன் இந்த அறை அமைக்கப்பட்டுள்ளது. இதுவரை தங்கள் பணிபுரியும் இடத்திலேயே மதிய உணவை எடுத்துக் கொண்டிருந்த கமிஷனர் அலுவலக ஊழியர்கள் இனி இந்த அறையில் அமர்ந்து சாப்பிடும்படி வசதி செய்யப்பட்டுள்ளது. புதிதாக அமைக்கப்பட்ட உணவு அருந்தும் அறையை ஆவடி போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் இன்று திறந்து வைத்தார். தமிழகத்தில் வேறு எந்த போலீஸ் அலுவலகத்திலும் இது போன்று உணவு அருந்தும் அறை அமைக்கப்படவில்லை. ஆவடி கமிஷனரேட்டில் முதன்முதலாக அமைக்கப்பட்டது கமிஷனர் அலுவலக ஊழியர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.