சென்னை ஆவடி காவல் ஆணையரகத்தில் பலே பைக் திருடனை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து 45 பைக்குகளை பறிமுதல் செய்தனர்.
சென்னை, திருமுல்லைவாயல், செந்தில் நகரைச் சேர்ந்தவர் கோனட்டி ரவி. இவர் கடந்த 14-ம் தேதி திருமுல்லைவாயில் ரயில் நிலையம் அருகே தனது TN-13 9003 என்ற பதிவெண் கொண்ட Hero Honda Dio இருசக்கர வாகனத்தை நிறுத்தி வைத்திருந்தார். அதனை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். அது தொடர்பாக அவர் திருமுல்லைவாயல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதில் ஆவடி, திருமுல்லைவாயல், அண்ணனூர் ஆகிய ரயில் நிலையங்களுக்கு அருகில் பொதுமக்களால் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் இருசக்கர வாகனங்கள் திருடப்பட்டு வந்தது தெரியவந்தது. அதனையடுத்து குற்றவாளிகளைப் பிடிக்க ஆவடி காவல் ஆணை யாளர் சந்தீப்ராய் ராத்தோர் உத்தரவின் பேரில் ஆவடி காவல் துணை ஆணையாளர் மகேஷ் மேற்பார்வையில், ஆவடி சரக உதவி ஆணையாளர் புருஷேத்தமன் தலைமையில், திருமுல்லைவாயல் நிலைய காவல் ஆய்வாளர் விஜயராகவன், குற்றப்பிரிவு ஆய்வாளர் கிருஷ்ணகுமார் மற்றும் ஆவடி காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் அருணாசலராஜா தலைமையில் தனிப்படைகள் அமைக் கப்பட்டன.
அதனையடுத்து நேற்று அயப்பாக்கம், திருவேற்காடு மெயின் ரோட்டில் உள்ள வள்ளி பேலஸ் அருகே தனிப்படையினர் வாகன தணிக்கையில் இருந்த போது TN-13 9003 என்ற பதிவெண் கொண்ட Hero Honda Dio இருசக்கர வாகனத்தில் வந்த நபரை மடக்கி பிடித்து விசாரித்தனர். அந்த பெயர் கணபதி (40), ராணிப்பேட்டை மாவட்டம், கரிவேடு கிராமம், ஓச்சேரி என்ற பகுதியைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. அந்த நபர் கடந்த சில ஆண்டுகளாக ஆவடி, திருமுல்லைவாயல், அண்ணனுார், கோடம்பாக்கம், கூடுவாஞ்சேரி, மறைமலைநகர் ஆகிய இடங்களில் உள்ள ரயில் நிலையங்களுக்கு அருகில் பொது மக்களால் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் இருசக்கர வாகனங்களை திருட்டு சாவிகள் போட்டு இருசக்கர வாகனங்களை திருடி சென்றுள்ளது தெரியவந்தது. அவரிடம் இருந்து 45 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அவற்றின் மதிப்பு சுமார் ரூ. 35 லட்சம் ஆகும். இவர் மீது ஏற்கனவே காவேரிப்பாக்கம் மற்றும் சேலையூர் ஆகிய காவல் நிலையங்களில் இருசக்கர வாகன திருட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டு அவற்றில் கைது செய்யப்பட்டு சிறை சென்றுள்ளது தெரியவந்துள்ளது. பைக் திருடனை கைது செய்த தனிப்படையினரை ஆவடி காவல் ஆணையாளர் சந்தீப்ராய் ரத்தோர் வெகுவாக பாராட்டினார்.