Take a fresh look at your lifestyle.

ஆர்கே நகர் சிறுவன் கொலை வழக்கில் 3 ரவுடிகள் கைது: கத்தி பறிமுதல்

17 year boy murder case 3 gangsters arrested in rk nagar

77

சென்னை, ஆர்.கே நகர் கொலை வழக்கில் சரித்திர பதிவேடு குற்றவாளி உட்பட 3 நபர்களை போலீசார் கைது செய்து கத்தியை பறிமுதல் செய்தனர்.

சென்னை, கொருக்குப்பேட்டை, ரயில்வே காலனி பகுதியில் வசித்து வந்த 17 வயது சிறுவன் கடந்த 18.05.2022 அன்று இரவு ஆர்.கே நகர், பழைய கிளாஸ் பேக்டரி ரோடு அருகே தனது நண்பர்களுடன் இருந்தபோது, மேற்படி 17 வயது சிறுவனிடம் போதை மாத்திரைகளை கேட்டு, அவரது நண்பர்கள் தகராறு செய்துள்ளார்கள். தகராறு முற்றிய நிலையில் மேற்படி 17 வயது சிறுவனை அவரது நண்பர்கள் கத்தியால் தாக்கிவிட்டு, தப்பிச் சென்றுள்ளனர். இதில் பலத்த இரத்த காயமடைந்த சிறுவனை அருகிலிருந்தவர்கள் மீட்டு, அரசு மருத்துவமனையில் சேர்த்து, சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி கடந்த 18.05.2022 அன்று மேற்படி சிறுவன் இறந்துள்ளார். இச்சம்பவம் குறித்து சிறுவனின் தாயார் ஆர்.கே நகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின் பேரில், கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

ஆர்.கே நகர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர விசாரணை செய்து, மேற்படி கொலை சம்பவத்தில் தொடர்புடைய கொறுக்குப்பேட்டையைச் சேர்ந்த சங்கர் (எ) கவுரிசங்கர், சரவணன், ரகுமான் ஆகிய 3 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 1 கத்தி பறிமுதல் செய்யப்பட்டது.
விசாரணையில் கவுரிசங்கர், சரவணன் மற்றும் ரகுமான் ஆகிய மூவரும் சேர்ந்து போதை மாத்திரைகளை வாங்கி தர வேண்டும் என்று மேற்படி 17 வயது சிறுவனிடம் கேட்டு, தகராறு செய்துள்ளனர். மேற்படி சிறுவன் மாத்திரைகளை வாங்கி தர மறுக்கவே, தகராறு முற்றிய நிலையில் மேற்படி 3 நபர்களும் சேர்ந்து, சிறுவனை கத்தியால் தாக்கி கொலை செய்தது தெரியவந்தது.

மேலும் விசாரணையில் கைது செய்யப்பட்ட சங்கர் (எ) கவுரிசங்கர் மீது 1 கொலை முயற்சி வழக்கு, 7 திருட்டு வழக்குகள், 7 வழிப்பறி வழக்குகள், 1 அடிதடி வழக்கு உட்பட 16 குற்ற வழக்குகள் உள்ளதும், இவர் ஆர்.கே நகர் காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளி என்பதும், ஏற்கனவே குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டு, சிறைக்கு சென்று வெளியே வந்துள்ளதும் தெரியவந்தது. மேலும் சரவணன் என்பவர் மீது, 1 கொலை முயற்சி வழக்கு , 7 திருட்டு வழக்குகள், 2 வழிப்பறி வழக்குகள், 1 போக்சோ வழக்கு மற்றும் 1 அடிதடி வழக்கு உட்பட 12 குற்ற வழக்குகள் உள்ளது தெரியவந்தது. கைது செய்யப்பட்ட 3 நபர்களும் விசாரணைக்குப்பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படவுள்ளனர்.