Take a fresh look at your lifestyle.

ஆரோவில்லில் பழங்கால உலோக சிலைகள் மீட்பு

idols seazed in aarovil

72

விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் தனியார் விற்பனை நிறுவனத்தில் வைக்கப்பட்டிருந்த தொன்மை வாய்ந்த 4 சிலைகளை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.

விழுப்புரம், ஆரோவில்லில் மரோமா சிலைகள் விற்பனை நிலையம் உள்ளது. அங்கு பழமையான உலோக சிலைகள் சட்ட விரோதமாக பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக சிலைத்திருட்டு தடுப்புப் பிரிவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து கும்பகோணம் கூடுதல் தலைமை குற்றவியல் நீதிமன்ற உத்தரவின்படி சிலை திருட்டு தடுப்புப்பிரிவு ஐஜி தினகரன் தலைமையிலான சிறப்பு தனிப்படை போலீசார் விழுப்புரம் மாவட்டம் ஆரோவில்லில் அமைந்துள்ள மரோமா நிறுவனத்தில் அதிரடியாக சோதனை நடத்தினர்.

அங்கு தொன்மையாக காட்சியளித்த 78 சென்டிமீட்டருடைய சிவகாமி அம்மன் உலோக சிலை, 45 சென்டி மீட்டருடைய ஆஞ்சநேயர் கற்சிலை, 30 சென்டிமீட்டருடைய நாக தேவதை கற்சிலை, 38 சென்டி மீட்டருடைய சேதமடைந்த மார்பளவு சிவன் கற்சிலை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சிலைகளுக்கான உரிய ஆவணங்கள் ஏதும் இல்லாததால் 4 சிலைகளையும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் போலீசார் நடத்திய விசாரணையில், மரோமா எனும் நிறுவனத்தின் உரிமையாளர் சந்தீக ரெட்டியின் மனைவி லாரா ரெட்டி என்பவர் தான் இந்த 4 சிலைகளையும் அங்கு வைத்திருந்தது கடத்தல் தடுப்புபிரிவு போலீசார் கண்டுபிடித்தனர்.

“தாங்கள் குடும்பம் விஜயநகர பேரரசு காலத்தில் இருந்து பணியாற்றியதாகவும், தங்களுடைய மூதாதையர் இந்த சிலைகளை தங்களிடம் கொடுத்து வைத்திருந்ததாகவும்” லாராவிடம் போலீசார் நடத்திய விசாரணையில் தெரிய வந்தது. ஆனால் சிலைகள் தொடர்பான உரிய ஆவணங்கள் எதுவும் இல்லை என்பதால் அனைத்து சிலைகளும் பறிமுதல் செய்யப்பட்டது. உரிய ஆவணங்கள் இன்றி சிலை வைத்திருந்தால், அது திருட்டு சிலையாக இருந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டிஜிபி ஜெயந்த் முரளி தெரிவித்துள்ளார்.

பறிமுதல் செய்யப்பட்ட சிலைகளை சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்து தொல்லியல் துறைக்கு இந்த சிலைகளின் தொன்மை குறித்தும் தமிழகத்தில் உள்ள கோயில்களில் இருந்து திருடப்பட்டு இருக்கிறதா என்பது குறித்தும் ஆய்வு நடத்த அனுப்பி வைத்துள்ளனர். இந்த சிலைகளின் மதிப்பு கோடிக்கணக்கில் இருக்கும் என கூறப்படுகிறது. விழுப்புரம் மாவட்டம் அதை சுற்றி உள்ள பகுதிகளில் இது போன்ற சிலைகள் எதுவும் சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் நடத்தி வருகின்றனர்.