தமிழ்நாட்டின் பல பகுதிகளில் நிதி நிறுவனங்கள் என்ற பெயரில் பல்வேறு நிறுவனங்கள் ஆரம்பிக்கப்பட்டு அந்நிறுவனங்கள் பங்குச் சந்தைகள், ஆன்லைன் வர்த்தகம், நிலங்களில் முதலீடுகள் செய்து மறு விற்பனை செய்தல் (Real estate) மற்றும் தங்க நகைகள் வாங்கி விற்பனை செய்தல் என்ற தொழில்களில் ஈடுபடுவதாகவும், அதில் பெரும் இலாபம் கிடைக்கும் என்று அறிவித்து, அதனால் பொதுமக்கள் தங்கள் நிறுவனங்களில் முதலீடுகள் செய்து பயன் பெறலாம் என்று அறிவித்துச் செயல்பட்டு வந்துள்ளன.
இவற்றில் சென்னையைத் தலைமையிடமாக் கொண்டு செயல்பட்டு வந்த ஆரூத்ரா கோல்டு டிரேடிங் பிரைவேட் லிமிடெட், LNS International Financial Service மற்றும் ஹிஜாவு அசோசியேட் பிரைவேட் லிமிடெட் ஆகிய நிதி நிறுவனங்கள் மிக முக்கியமானவை ஆகும். இந்த நிறுவனங்கள் பொதுமக்களிடம் பெறப்படும் முதலீடுகளுக்கு மாத வட்டியாக 10 சதவீதம் முதல் 25 சதவீதம் வரை வழங்குவதாக அறிவித்துள்ளன.
பொதுமக்களிடம் முதலீடுகளைப் பெறுவதற்காக இக்கம்பெனிகள் முகவர்களையும், பணியாளர்களையும் நியமித்து, பல்வேறு ஊர்களில் உள்ள ஆடம்பர நட்சத்திர ஹோட்டல் களில் கூட்டங்கள் நடத்தி, அதில் பொதுமக்களைக் கவரும் வகையில் இந்நிறுவனங்களின் இயக்குநர்கள் ஆசை வார்த்தைகளைக் கூறிப் பேசியுள்ளார்கள். ஆனால், எந்தவொரு முதலீட்டுத் திட்டமும் இல்லாமல் இந்நிறுவனங்களில் முதலாவதாக முதலீடு செய்த வர்களின் பணத்தைப் பயன்படுத்தி அவர்களுக்கே மாதவட்டியைக் கொடுத்துள்ளனர். பிறகு அடுத்தபடியாக முதலீடு செய்யும் பொதுமக்கள் பணத்தைப் பயன்படுத்தி முந்தைய முதலீடு செய்தவர்களுக்கு வட்டியை வழங்கியுள்ளனர். இது “PONZI Scheme” எனக் கூறப்படும் வகையைப் போலாகும். ஆனால், அதன் முதலீட்டாளர்களுக்கு மாத வட்டியையும் மற்றும் முதலீட்டுத் தொகைகளையும் முறையாக திரும்பத் தரவில்லை எனத் தெரிகிறது.
* ரூ. 2,438 கோடி மோசடி செய்த ஆருத்ரா கோல்டு
ஆருத்ரா கோல்டு டிரேடிங் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் குறித்து சென்னை பொருளாதாரக் குற்றப் பிரிவு காவல்துறையினருக்கு புகார்கள் வரப்பெற்றது. அதன் அடிப்படையில் பொருளாதாரக் குற்றப் பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர். இவ்வழக்கு விசாரணை சம்பந்தமாக 24.05.2022 அன்று சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், செங்கல்பட்டு, விருதுநகர், திரு வண்ணாமலை, கடலூர் மற்றும் அரியலூர் ஆகிய ஊர்களில் 37 இடங்களில் ஆருத்ரா நிறுவனத்திற்கு சம்பந்தப்பட்டவர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்கள் ஆகிய இடங்களிலும் அதன் தொடர்ச்சியாக வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு இடங்களிலும் பொருளாதாரக் குற்றப் பிரிவுக் காவல்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.
இதுவரை திரட்டப்பட்ட தகவல்கள் அடிப்படையில், சுமார் 1,09,255 பொதுமக்கள் இந்நிறுவனங்களில் முதலீடுகள் செய்துள்ளதும், அதன் மொத்தத் தொகை சுமார் ரூ. 2,438 கோடி என தெரியவருகிறது. ஆரூத்ரா கோல்டு டிரேடிங் பிரைவேட் லிமிடெட் நிறுவன த்தின் மூலம் பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் வழக்கின் விசாரணை அதிகாரியிடம் eowtn07of2022@gmail.com என்ற மின்னஞ்சல் மூலம் புகார் அளிக்கலாம்.
இதுவரை இவ்வழக்கில் சம்மந்தப்பட்ட 8 பேரில் பாஸ்கர், மோகன்பாபு, பட்டாபிராம் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். மேலும் இந்த வழக்கில் ராஜசேகர், ஹரிஷ், மைக்கேல் ராஜ், நாராயணி ஆகிய 4 குற்றவாளிகள் தலைமறைவாக உள்ளனர். அவர்களைப் பற்றி மேற்கண்ட இமெயிலில் தகவல் தெரிவிக்கலாம் என பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.
* 6,000 கோடியை விழுங்கிய எல்என்எஸ் இன்டர்நேஷனல் பைனான்ஸ் சர்வீஸ் நிறுவனம்
LNS International Financial Service என்ற நிதி நிறுவனம் சம்மந்தமாக சென்னை பொருளாதாரக் குற்றப் பிரிவு போலீசார் 04.08.2022 அன்று வழக்கு பதிவு செய்து 3 பேரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், ராணிப் பேட்டை, ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய ஊர்களில் 21 இடங்களில் சம்பந்தப் பட்டவர்கள் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் பொருளாதாரக் குற்றப் பிரிவு போலீசார் சோதனை மேற்கொண்டனர். இதுவரை திரட்டப்பட்ட தகவல்கள் அடிப் படையில், சுமார் 1 லட்சம் பொதுமக்கள் இந்நிறுவனங்களில் முதலீடுகள் செய்துள்ளதும், அதன் மொத்த தொகை சுமார் 6,000 ஆயிரம் கோடிகளுக்கு மேல் என தெரியவந்துள்ளது. மேலும் இந்த வழக்கில் வேலூர், சத்துவாச்சேரியைச் சேர்ந்த லட்சுமி நாராயணன், வேதநாராயணன், ஜனார்த்தனன், மோகன்பாபு ஆகிய 4 பேரும் தலைமறைவாக உள்ளனர்.
LNS International Financial Service நிறுவனத்தின் மூலம் பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் வழக்கின் விசாரணை அதிகாரியிடம் eowInsifscase@gmail.com என்றமின்னஞ்சல் மூலம் புகார் அளிக்கலாம்.
* 4,500 பேரிடம் ரூ. 600 கோடி மோசடி செய்த ஹிஜாவு நிறுவனம்
ஹிஜாவு அசோஸியேட்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம் மோசடி செய்தது தொடர்பாக கடந்த 21ம் தேதியன்று சென்னையில் உள்ள 21 இடங்களில் சம்மந்தப்பட்டவர்கள் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினர் சோதனை மேற்கொண்டனர். இதுவரை திரட்டப்பட்ட தகவல்கள் அடிப்படையில், சுமார் 4,500 பொதுமக்கள் இந்நிறுவனங்களில் முதலீடுகள் செய்துள்ளதும், அதன் மொத்தத் தொகை சுமார் ரூ. 600- கோடி எனவும் தெரியவருகிறது. தொடர்ந்து தினமும் பொதுமக்கள் இந்நிறுவனத்தின் மீது புகார்கள் கொடுத்த வண்ணம் உள்ளனர். முதலீட்டாளர்கள் எண்ணிக்கையும், முதலீடு தொகையும், மேலும் அதிகரிக்கும் எனவும் தெரியவருகிறது.
ஹிஜாவு அசோஸியேட்ஸ் பிரைவேட் லிமிடெட் பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் வழக்கின் விசாரணை எனவே என்ற நிறுவனத்தின் மூலம் அதிகாரியிடம் hijaueowdsp@gmail.com என்றமின்னஞ்சல் மூலம் புகார் அளிக்கலாம். இதுவரை இவ்வழக்கில் சம்மந்தப்பட்ட குற்றவாளிகளில் ஒரு நபர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் அனுப்பப்பட்டுள்ளார். மேலும் கீழ்க்கண்ட நபர்கள் தலைமறைவாக உள்ளனர். அவர்கள் பற்றிய தகவல் தெரிந்தால் பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கலாம். தகவல் கொடுப்பவரின் விவரங்கள் ரகசியமாக பாதுகாக்கப்படும்.
நேரிலோ அல்லது தொலைபேசி மூலமோ தகவல் தெரிவிக்கவேண்டிய முகவரி.
காவல் கண்காணிப்பாளர், தலைமையிடம்,
பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகம்,
தொலைபேசி எண் – 044 22504311
காவலர் பயிற்சி கல்லூரி,
அசோக் நகர், சென்னை. 83.
கட்டுப்பாட்டு அறை,
பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகம்,
காவலர் பயிற்சி கல்லூரி,
அசோக் நகர், சென்னை. 83.
தொலைபேசி எண்.044 22504332
இதுபோன்று அதிகவட்டி தருவதாக ஆசை வார்த்தைகளைக் கூறி பொதுமக்களை ஏமாற்றி வரும் நிதி நிறுவனங்களில், தங்களுடைய பணத்தினை முதலீடு செய்து ஏமாறவேண்டாம் என பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்திய ரிசர்வ் வங்கியால் வெளியிடப்பட்ட அங்கீகாரம் பெற்ற வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் தங்களின் கடின உழைப்பால் பெறப்பட்ட பணத்தினை முதலீடு செய்யுமாறு பொதுமக்கள் அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.