Take a fresh look at your lifestyle.

ஆன்லைன் ‘ரம்மி’ தடை சட்ட மசோதாவில் கவர்னர் விரைவில் முடிவு: அமைச்சர் ரகுபதி பேட்டி

89

ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதா பரிசீலனையில் இருப்பதாகவும், விரைந்து முடிவு எடுப்பதாகவும் கவர்னர் தெரிவித்தார் என்று அமைச்சர் ரகுபதி கூறினார்.

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கு தடை விதிக்கும் சட்ட மசோதா நடந்து முடிந்த சட்டசபை கூட்டத்தொடரில் தமிழக அரசு நிறைவேற்றியது. ஆன்லைன் சூதாட்டங்களுக்கு எதிரான தமிழக அரசின் அவசர சட்டத்துக்கு ஏற்கெனவே கவர்னர் ஒப்புதல் அளித்திருந்தார். இதனைத்தொடர்ந்து அவசர சட்டத்தை சட்டமாக்குவதற்கான சட்ட மசோதா சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த சட்ட மசோதாவுக்கு கவர்னரின் ஒப்புதல் கோரி அனுப்பி வைத்தது தமிழக அரசு. அதற்கு கவர்னர் ஒப்புதல் அளிக்காத நிலையில் அது காலாவதியாகியிருந்தது. அவசர சட்டத்திற்கு ஒப்புதல் அளித்த கவர்னர், சட்ட மசோதாவுக்கு ஏன் ஒப்புதல் அளிக்கவில்லை என்று தமிழக அரசு தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்தது.

அவசர சட்டத்தில் இடம்பெற்றிருந்த அதே அம்சங்கள்தான், சட்ட மசோதாவிலும் இடம்பெற்றிருந்தது. ஆனால் கவர்னர் ஒப்புதல் அளிக்காத நிலையில், அதுதொடர்பாக தமிழக அரசிடம் பல்வேறு விளக்கங்களைக் கேட்டு கவர்னர் கடிதம் எழுதியிருந்தார். தமிழக அரசும் 24 மணி நேரத்திற்குள்ளாக விரிவான விளக்கம் அளித்திருப்பதாக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி ஏற்கெனவே தெரிவித்திருந்தார். இந்நிலையில் தமிழக அரசு கொண்டு வந்துள்ள ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க கோரி சட்டத்துறை அமைச்சர் ரகுபதி மற்றும் துறையின் செயலாளர்கள் உள்ளிட்டோர் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் சந்தித்துப் பேசினர்.

கவர்னரின் சந்திப்பிற்கு பிறகு செய்தியாளர்களிடம் அமைச்சர் ரகுபதி பேசியதாவது: ஆன்லைன் ரம்மி, போக்கர் போன்ற சூதாட்டங்களை எல்லாம் இணையவழி சூதாட்டங்களை தடை செய்வதற்காகவும், ஒழுங்குப்படுத்து வதற்காகவும் தமிழக அரசால் இயற்றப்பட்டுள்ள சட்டத்திற்கு ஒப்புதல் அளிப்பது தொடர்பாக கவர்னர் எழுப்பிய கேள்விகளுக்கு தமிழக அரசு சார்பில் பதில்களை சொல்லியிருந்தோம். இப்போது அதுதொடர்பாக அரைமணி நேரம் விளக்கங்களை எல்லாம் தந்திருக்கிறோம்.

கவர்னரும் அந்த மசோதா தன்னுடைய பரிசீலனையில் இருக்கிறது. விரைவில் அதில் நான் முடிவெடுத்து முடிவை தெரிவிக்கிறேன் என்று தமிழக முதல்வரிடம் சொல்லுங்கள் என்று கூறியிருக்கிறார். அவசர சட்டத்துக்கும், இந்த சட்டத்திற்கும் வித்தியாசங்கள் கிடையாது. அவசர சட்டம் இயற்றப்பட்டபோது ஆன்லைன் ரம்மியால் தற்கொலை செய்து கொண்டவர்களின் எண்ணிக்கை 17, தற்போது இந்த எண்ணிக்கை 25. நேரடியாக இந்த விளையாட்டை விளையாடிய யாரும் தற்கொலை செய்து கொண்டது கிடையாது. எனவே ஆன்லைன் ரம்மி தடை செய்யப்பட வேண்டும். இதனால் 25 உயிர்களை குறுகிய காலத்திலேயே நாம் இழந்திருக்கிறோம்.

எனவே வல்லுநர் கொடுத்துள்ள அறிக்கையின் அடிப்படையில் தான் இந்த சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளதாக சட்டத்தின் முகப்புரையில் தெரிவிக்கப்பட்டுள்ளதையும் கூறியிருக்கிறோம். ஆன்லைனில் விளையாடுவதற்கும், நேரடியாக விளையாடுவதற்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன. ஆன்லைனில் விளையாடுகிறவர்கள், அந்த செயலியைப் பயன்படுத்தி எப்படியாவது பணத்தைக் கொள்ளையடித்துவிடுவர். இதனால் மக்களின் பணம் பறிபோகிறது.

உதாரணத்திற்கு ஆன்லைன் ரம்மி விளையாடுங்கள், உங்களுக்கு 8 ஆயிரம் ரூபாய் தந்திருக்கிறோம் என்றுகூறி, அனைவருக்கும் குறுஞ்செய்தி வருகிறது. அதை நம்பி விளையாட சென்று, 8 லட்ச ரூபாயை இழந்து அந்த குடும்பம் ரோட்டில் நிர்க்கதியாக நிற்கிறது. எனவே இதனை தடை செய்ய வேண்டும். அதற்கு இந்த சட்ட மசோதாவுக்கு விரைவில் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று தமிழக முதல்வரின் சார்பில் கவர்னரிடம் கோரிக்கை வைத்தோம்” என்றார். மேலும் ரகுபதி கூறுகையில், ‘‘இதுவரை 21 மசோதாக்கள் கவர்னரிடம் நிலுவையில் உள்ளன. குறிப்பிட்ட காலத்திற்குள் எந்த சட்ட மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று எந்த கால நிர்ணயமும் கிடையாது. எனவே கால நிர்ணயம் செய்யும்படி நாம் கேட்க முடியாது. அரசியல் சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்தால், நிச்சயமாக கால நிர்ணயம் செய்து ஒப்புதல் அளிக்க வேண்டும் என கேட்க முடியும்”. இவ்வாறு கூறினார்.