ஆன்லைனில் கடன் வாங்கினால் சிக்கலில் மாட்டிக் கொள்வீர்கள்: டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை
dgp sylendrababu awareness
சென்னை, ஜுன். 15–
ஆன்லைனில் கடன் வாங்கினால் சிக்கில் சிக்க வைக்கப்பட்டு மோசடி செய்யப்படுவீர்கள் என தமிழக டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை மற்றும் விழிப்புணர்வு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
வங்கியில் கடன் வாங்கினால் சொத்து ஆவணங்கள், ஜாமின் கையெழுத்து என ஆயிரத்து எட்டு நடைமுறைகளை பின்பற்ற வேண்டியுள்ளது. ஆயினும் தற்போது குறைந்த வட்டியில் கடன் வழங்குவதற்கு ஏராளமான நிதி நிறுவனங்கள் தினமும் டெலிகாலர்கள் மூலம் தங்கள் நிறுவனங்களை பிரபலப்படுத்துகின்றனர். குறைந்த வட்டிக்கு ஆசைப்பட்டு அந்த நிறுவனங்களிடம் பொதுமக்கள் கடன்பெற முயல்கின்றனர். ஆனாலும் அங்கும் ஏராளமான ஆவணங்களை சமர்ப்பிக்க சொல்வதால் கடன்பெறுவதில் சாமான்ய மக்களுக்கு சிக்கல் ஏற்படுகிறது. கடன் கிடைக்காதா என்று ஏங்கும் இளைஞர்களை வசப்படுத்தி இந்த சாட்டிலைட் யுகத்தில் தாங்கள் லாபம் பெறுவதற்கு தற்போது ஏராளமான இணையதள செயலிகள் ஆயிரக்கணக்கில் ஆன்லைனில் வந்து இறங்கியுள்ளன. அவற்றில் பெரும்பாலும் அனைத்தும் போலியானவையே. ஆன்லைனில் ஆவணங்களை சமர்ப்பிக்க சொல்லி விட்டு பின்னர் அவர்களிடம் இருந்து பணம் திரும்பப் பெறுவதற்கு மோசமான வழிமுறைகளை சில செயலிகள் பின்பற்றினாலும், பல செயலிகளில் அவரிடம் இருந்து மிரட்டி பணம் வாங்கும் சமூக விரோத செயல்களில் ஈடுபடுகின்றனர்.
அது தொடர்பாக டிஜிபி சைலேந்திரபாபு வெளியிட்டுள்ள வீடியோவில், ‘‘ஆன்லைனில் நிறைய லோன் ஆப்புகள் வலம் வருகின்றன. அதனை அப்ளை பண்ணும் போது உங்கள் போட்டோ கேட்பார்கள். அத்தோடு உங்கள் கான்டாக்ட் லிஸ்ட்டில் உள்ள நபர்களின் பெயர் விவரம் இமெயில் முகவரி போன்றவற்றை கேட்பார்கள். நீங்கள் கேட்டபடி நான்காயிரம் அல்லது ஐந்தாயிரம் லோன் உடனே உங்கள் அக்கவுண்டுக்கு வந்து விடும். நீங்களும் மகிழ்ச்சியாகி விடுவீர்கள். அடுத்தது அவர்கள் செய்யும் காரியம் என்னவென்றால் உங்கள் போட்டோவை ஆபாசமான முறையில் மார்பிங் செய்து அதனை உங்களுக்கு அனுப்புவார்கள். உங்களை தர்மசங்கடமான சூழ்நிலையில் சிக்க வைத்து உங்களை பிளாக் மெயில் செய்து பணம் பறிப்பதே அவர்களது நோக்கம். உடனடியாக பத்தாயிரம் ரூபாய் தராவிடில் அந்த ஆபாசப் புகைப்படத்தை உங்கள் கான்டாக்ட் லிஸ்ட்டில் உள்ளவர்களுக்கு அனுப்பி விடுவோம் என மிரட்டல் விடுப்பார்கள். இதனால் உங்கள் நிம்மதி போய் விடும். அது உண்மை இல்லை என்றாலும் மற்றவர்கள் அதை நம்ப மாட்டார்கள். அது போன்ற செயலிகளை முடக்க நமது காவல்துறை சைபர்கிரைம் முயற்சி செய்து வருகின்றனர். நேஷனல் ருப்பி, சிசி லோன், மாசன் ருப்பி, சிட்டி கேஷ் என்ற பல வகையான ஆப்புக்கள் டவுன்லோடு செய்யாதீர்கள். அப்படி செய்தாலும் அதனை உடனே அன் இன்ஸ்டால் செய்து விடுங்கள். பாதுகாப்பாக இருங்கள். இது தமிழ்நாடு காவல்துறையின் ஒரு வேண்டுகோள்,
இவ்வாறு சைலேந்திரபாபு அதில் விழிப்புணர்வாக தெரிவித்துள்ளார்.