ஆந்திராவைச் சேர்ந்த கஞ்சா வியாபாரிகள் 7 பேரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்து ஆவடி போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
கஞ்சா வியாபாரிகளை அறவே ஒழிக்கும் பொருட்டு ஆவடி காவல் ஆணையரகத்தில் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவின் பேரில் அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டு வருகிறது. அதன்படி செங்குன்றம் துணைக்கமிஷனர் மணிவண்ணன் மேற்பார் வையில் அங்கு தீவிர கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் ஒழிப்பு நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன் தொடர்ச்சியாக செங்குன்றம் பகுதியில் கஞ்சாவை பதுக்கி விற்பனை செய்த ஆந்திரா விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த குடா கிஷோர் குமார் (36), திப்புரு ரமேஷ் (26), அனுகூர் சோமேஷ் குமார் (32), அங்குரி கொண்ட பாபு (26), புஜாரி ராஜு பாபு (26), மாரி ராஜு பாபு (32), பட்டி பிரபாகர் ராவ் (31) ஆகிய 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டுள்ளனர். இவர்கள் தொடர்ந்து இது போன்று ஆந்திராவில் கஞ்சாவை கடத்தி வந்து தமிழகத்தில் விற்பனை செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். இவர்கள் 7 பேர் மீதும் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று ரெட்ஹில்ஸ் துணைக் கமிஷனர் மணிவண்ணன் ஆவடி கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோருக்கு பரிந்துரை செய்தார். அதனை ஆய்வு செய்த கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் கஞ்சா வியாபாரிகள் 7 பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். மேலும் ஆவடி காவல் ஆணையரகத்தில் கடந்த 11 மாதங்களில் 184 பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.