Take a fresh look at your lifestyle.

ஆதாருடன் இணைக்காவிட்டாலும் மின்கட்டணம் செலுத்தலாம்: அமைச்சர் செந்தில்பாலாஜி விளக்கம்

66

தமிழகத்தில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கும்படி மின்வாரியம் சார்பில் உத்தரவிடப் பட்டுள்ளது. ஆதாரை இணைக்காவிட்டால் மின் கட்டணம் செலுத்த முடியாத நிலை ஏற்படும், 100 யூனிட் இலவச மின்சாரத்துக்கு சிக்கல் ஏற்படும் என தொடர்ந்து செய்திகள் பரவி வருகின்றன. ஆதார் இணைப்பு தொடர்பாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக வருவாய் பிரிவு தலைமை நிதி கட்டுப்பாட்டாளர் விளக்கம் அளித்துள்ளார்.

இந்நிலையில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கோவையில் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் இதற்கு விளக்கம் அளித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- ‘‘மின் வாரியத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல ஆதார் எண் இணைப்பு என்பது முக்கியம். மின் கட்டண விவகாரத்தில் ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் மின்சாரத்துறைய அணுகி தெளிவு பெற்றுக் கொள்ளலாம். அதிமுக, பாஜக போன்ற கட்சிகள் அரசு மீது அவதூறு பரப்ப வேண்டும் என்ற நோக்கில் தொடர்ந்து அவதூறு செய்திகளை பரப்பி வருகிறார்கள். ஆதார் எண் இல்லை என்றாலும் தற்போது கட்டணம் செலுத்தலாம். தவறான தகவலை பரப்ப வேண்டாம். ஆதார் எண் கொடுப்பது நல்லது. மின் இணைப்பு பெற்றவர்கள் ஆதார் எண்ணை கண்டிப்பாக கொடுக்க வேண்டும். யார் பேரில் மின் இணைப்பு இருக்கிறதோ அந்த நபர் இறந்திருக்கும் பட்சத்தில் அதற்கான அவகாசங்கள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. சிறப்பு முகாம்கள் நடைபெற இருக்கின்றன. தங்கள் மின் இணைப்புக்கான பெயர் மாற்றம் செய்வதற்கான சிறப்பு முகாம்கள் விரைவில் நடைபெற இருக்கின்றன. ஆதார் எண் இணைப்பதற்கான கால அவகாசம் கொடுக்கப்பட்டு உள்ளது. கண்டிப்பாக 100 சதவீதம் ஆதார் எண்ணை இணைப்பது அவசியம். மின்சார துறையை சீர்திருத்தம் செய்யும் போது ஆதார் எண்ணை இணைத்தால் தான் மின்சார வாரியத்தை புதிய பரிணாமத்தோடு மேம்படுத்த முடியும்’’. இவ்வாறு அவர் கூறினார்.