சென்னை, ஆதம்பாக்கம் பகுதியில் கடையில் புகுந்து செல்போன் மற்றும் பணம் திருடிச் சென்ற 2 நபர்கள் கைது செய்து 1 செல்போன் மற்றும் 1 இருசக்கர வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
சென்னை, ஆலந்தூர், வடக்கு ராஜா தெருவில் வசிக்கும் முஸ்தபா, வ/29, த/பெ.மஸ்தான் என்பவர் ஆதம்பாக்கம், தில்லை கங்கா நகர், மெட்ரோ இரயில் நிலையம் அருகில் ஸ்டி க்கர் கடை நடத்தி வருகிறார். முஸ்தபா கடந்த 07.12.2022 அன்று மாலை, அருகில் உள்ள கடைக்கு செல்ல அவரது கடையின் ஷட்டரை பாதி மூடிவிட்டு, வெளியே சென்று சிறிது நேரம் கழித்து வந்து பார்த்தபோது, கடையின் ஷட்டர் முழுவதும் திறக்கப்பட்டு, கடையில் வைத்திருந்த பணம் ரூ.20,000/- மற்றும் 1 செல்போன் திருடு போயிருந்தது. இது குறித்து முஸ்தபா, S-8 ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின்பேரில், வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. ஆதம்பாக்கம் காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் சம்பவ இடத்தினருகில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆராய்ந்ததில், இருசக்கர வாகனத்தில் வந்த 2 நபர்கள் மேற்படி திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.
அதன்பேரில் காவல் குழுவினர் தீவிர விசாரணை செய்து, மேற்படி திருட்டில் ஈடுபட்ட ராயப்பேட்டையைச் சேர்ந்த அர்ஜுன் (23), சையது அமீர் (23) ஆகிய 2 நபர்களை கைது செய்தனர். அவர்களிடமிருந்து புகார்தாரரின் 1 செல்போன் மற்றும் குற்றச் செயலுக்கு பயன்படுத்திய 1 இருசக்கர வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் அர்ஜுன் மீது ஏற்கனவே ஐஸ்அவுஸ், ஜாம்பஜார் ராயப்பேட்டை ஆகிய காவல் நிலையங்களில் தலா 1 திருட்டு வழக்கு உள்ளது தெரியவந்தது. கைது செய்யப்பட்ட எதிரிகள் இருவரும் விசாரணைக்குப் பின்னர் நேற்று (17.12.2022) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.