ஆட்டோவில் தவற விட்ட நகையை மீட்டுக் கொடுத்த போலீசார், ஆட்டோ டிரைவர்களுக்கு கமிஷனர் சங்கர்ஜிவால் நேரில் பாராட்டு
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சிறப்பாக பணிபுரிந்த காவல் அதிகாரிகள், ஆளிநர்கள் மற்றும் நேர்மையாக செயல்பட்ட 2 ஆட்டோ ஓட்டுநர்களை நேரில் அழைத்து சான்றிதழ் மற்றும் வெகுமதி வழங்கி பாராட்டினார்.
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் உத்தரவின்பேரில், சென்னை பெரு நகரில் குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை கண்டுபிடித்து கைது செய்யவும், குற்றச் செயல்கள் நடவாமல் தடுக்கவும், சுற்றுக் காவல் ரோந்து பணிகள் அதிகரித்தல், சுற்றுக் காவல் ரோந்து வாகனங்கள் மூலம் அதிகளவில் கண்காணித்தல், வாகனத் தணிக்கைகள் மேற்கொள்ளுதல் மற்றும் பல்வேறு குற்றத் தடுப்பு நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், காவல் ஆளிநர்களை ஊக்குவிக்கும் வகையில், திருட்டு, வழிப்பறி சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை கைது செய்து களவுப் பொருட் களை மீட்ட காவல் ஆளிநர்கள், குற்ற சம்பவங்களின்போது, விரைந்து செயல்பட்டு குற்றவாளி களை கையும் களவுமாக கைது செய்யும் காவல் ஆளிநர்கள், ரோந்து வாகன காவல் குழுவினர்கள் மற்றும் சிறப்பாக பணிபுரிந்து குற்றவாளிகளை கைது செய்யும் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் நேரில் அழைத்து அவர்களது பணியைப் பாராட்டி வெகுமதி மற்றும் சான்றிதழ்கள் வழங்கி வருகிறார்.
1. மயிலாப்பூர் பகுதியில் ஆட்டோவில் பயணி தவறவிட்ட ரூ. 8 லட்சம் மதிப்புள்ள தங்கம், பிளாட்டினம் மற்றும் வைர நகைகளை மீட்டு பெண்ணிடம் ஒப்படைத்த போலீசாருக்கு பாராட்டு.
சென்னை, அண்ணாநகர், சாந்தி காலனி பகுதியில் வசித்து வரும் கோட்டீஸ்வரி (64) என்பவர் தனது மகளின் திருமணத்திற்கு நகை வாங்குவதற்கு கணவர் மற்றும் மகளுடன் தி.நகரில் உள்ள தங்க நகைக்கடைக்கு கடந்த 27.01.2023 அன்று மதியம் சென்று ரூ.8 லட்சம் மதிப்புள்ள 4 சவரன் தாலிச்செயின், வைரம் மற்றும் பிளாட்டின நகைகளை வாங்கிக் கொண்டு ஆட்டோவில் ஏறி மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் தெப்பக்குளம் அருகில் இறங்கிய போது, மேற்படி ரூ.8 லட்சம் மதிப்புள்ள தங்க, வைர, பிளாட்டின நகைகள் அடங்கிய பையை ஆட்டோவின் பின் சீட்டில் மறந்து விட்டுச்சென்றுள்ளனர். கோயிலுக்குள் சென்ற சிறிது நேரத்தில் தங்க நகைகள் அடங்கிய பையை ஆட்டோவில் தவறவிட்டதை உணர்ந்த கோட்டீஸ்வரி, ஆட்டோவில் வந்து இறங்கிய இடத்தில் தேடியபோது ஆட்டோ கிடைக்கவில்லை.
உடனே கோட்டீஸ்வரி மயிலாப்பூர் காவல் நிலையத்தில் இது குறித்து கொடுத்த புகாரின் பேரில் E-1 மயிலாப்பூர் காவல் நிலைய ஆய்வாளர் தனசேகர் தலைமையில் உதவி ஆய் வாளர் சஞ்சீவி, தலைமைக் காவலர்கள் தியாகராஜன், ஜான்பிரதாப் மற்றும் முதல் நிலைக்காவலர் சங்கர் தினேஷ் ஆகியோர் அடங்கிய காவல் குழுவினர் சம்பவயிடத்திற்கு விரைந்து சென்று, சம்பவயிடத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான ஆட்டோவின் பதிவு எண்ணை வைத்து, ஆட்டோ ஓட்டுநரின் முகவரி மற்றும் செல்போன் எண்ணை கண்டுபிடித்து, செல்போனில் தொடர்பு கொண்டு விவரங்கள் கூறியபோது, ஆட்டோ ஓட்டுநர் ஆட்டோவின் பின்பக்கம் பார்த்து, கோட்டீஸ்வரியின் தங்க நகைகள் அடங்கிய பை இருப்பதாகவும், தான் தற்போது கோயம்பேட்டில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். உடனே காவல் குழுவினர் கோயம்பேட்டிற்கு விரைந்து சென்று மேற்படி ஆட்டோ ஓட்டுநரிடமிருந்து நகைகள் அடங்கிய பையை மீட்டு உரிமையாளர் கோட்டீஸ் வரியிடம் பத்திரமாக ஒப்படைத்தனர்.
2. திருவான்மியூர் பகுதியில் சாலையில் கேட்பாரற்று கிடந்த 1 சவரன் கைச்செயின் மற்றும் ரூ.1,700 அடங்கிய மணிபர்ஸை நேர்மையாக காவல் நிலையத்தில் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநருக்கு பாராட்டு.
சென்னை, துரைப்பாக்கம், சூளைமாநகர், முதல் தெரு என்ற முகவரியில் வசித்து வரும் ஆட்டோ ஓட்டுநர் சேகர், 60 என்பவர் கடந்த 28.01.2023 அன்று காலை 10.00 மணியளவில் தனது ஆட்டோவில் சென்று கொண்டிருந்த போது, டைடல் பார்க் சிக்னல் அருகில் சாலையில் கேட்பாரற்று கிடந்த மணிப்பர்ஸை எடுத்து திருவான்மியூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். திருவான்மியூர் காவல் குழுவினர் மேற்படி மணிப்பர்ஸை சோனை செய்த போது, அதில் 1 சவரன் தங்க கைச்செயின் மற்றும் ரொக்கம் ரூ. 1,700- இருந்தது தெரிய வந்தது. காவல் குழுவினர் தீவிர விசாரணை செய்து மேற்படி மணி பர்ஸின் உரிமையாளர் மகாராட்டிராவைச் சேர்ந்த ராகேஷ், 41 என்பவரிடம் பத்திரமாக ஒப்படைத்தனர்.
3. 4.5 சவரன் தாலிச்செயினை கண்டெடுத்து உரிமையாளரிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநருக்கு பாராட்டு.
சென்னை, வில்லிவாக்கத்தைச் சேர்ந்த சதிஷ்குமார், 40 என்பவர் அவரது மனைவியுடன் 23.01.2023 அன்ற தீவுத்திடல், அரசு சுற்றுலா பொருட்காட்சி சென்று, இரவு சுமார் 10.00 மணிய ளவில், நுழைவு வாயில் – 1 அருகே ஒரு ஆட்டோவில் வில்லிவாக்கம் செல்ல கூறிய போது, சதிஷ்குமார் அந்த ஆட்டோ ஓட்டுநரிடம் Gpay உள்ளதா என கேட்டபோது, அந்த ஆட்டோ ஓட்டுநரிடம் Gpay இல்லாததால், அருகில் இருந்த வியாசர்படி, சத்யமூர்த்தி நகர், 27வது பிளாக்கைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் லுயிஸ், 52 என்பவர் தன்னிடம் Gpay உள்ளது எனக்கூறி, சதிஷ்குமாரிடம் இருந்து Gpay மூலம் பணம் பெற்று, லூயிஸ் தன்னிடமிருந்து பணத்தை அந்த ஆட்டோ ஓட்டுநரிடம் கொடுத்துள்ளார்.
இரவு சுமார் 11.00 மணியளவில் வில்லிவாக்கத்தில் உள்ள தனது வீட்டிற்கு வந்தடைந்த சதிஷ்குமார், Gpay செல்போனை கொண்டு ஆட்டோ ஓட்டுநர் லூயிஸை தொடர்பு கொண்டு, தீவுத்திடல் அருகே ஆட்டோவில் செல்ல தான் Gpay செய்த விவரங்களை கூறி, தனது மனைவியின் 4.5 சவரன் எடை கொண்ட தாலிச்சரடு பொருட்காட்சியை கண்டுவிட்டு வரும் வழியில் காணாமல் போனதாகவும், அங்கு உள்ளதா என பார்த்து கூறும்படியும் கேட் டுள்ளார். ஆட்டோ ஓட்டுநர் லூயிஸ் தற்போது ராயப்பேட்டையில் உள்ளதாகவும் சவாரி முடித்து சென்று பார்க்கிறேன் எனக் கூறி, நள்ளிரவு சுமார் 12.00 மணியளவில், லூயிஸ் தீவுத்திடல் நுழைவு வாயில்-1 அருகே தேடி பார்த்ததில், தாலிச்சரடு இருந்ததை கண்டு எடுத்தார். பின்னர், சதிஷ்குமாருக்கு தொடர்பு கொண்டு, விவரங்களை கூறி காலையில் பெற்றுக் கொள்ளுமாறு கூறியுள்ளார். ஆனால் மறுநாள் (24.01.2023) சதிஷ் குமார் செல் போனை எடுக்காததால், லூயிஸ் தன்னி டமிருந்து 4.5 சவரன் தங்க தாலிச்சரடை தனது வீட்டினருகே உள்ள P-3 வியாசர்பாடி காவல் நிலையத்தில் ஒப்படைத்து விவரங்களை கூறினார். பின்னர் P-3 வியாசர்பாடி காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் சதிஷ்குமாரை வரவழைத்து, விசாரணை செய்து, 4.5 சவரன் தாலிச்சரடை சதிஷ்குமாரிடம் ஒப்படைத்தனர். மேற் படி சம்பவங்களில் சிறப்பாக பணிபுரிந்த காவல் அதிகாரிகள், ஆளிநர்கள் மற்றும் நேர்மை யாக செயல்பட்ட 2 ஆட்டோ ஓட்டுநர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் இன்று 30.1.2023 நேரில் அழைத்து சான்றிதழ் மற்றும் வெகுமதி வழங்கி பாராட்டினார்.