Take a fresh look at your lifestyle.

ஆட்டோவில் சென்று செல்போன் பறிப்பு: நூதன கைவரிசை காட்டிய இருவர் கைது

101

சென்னை, திருவொற்றியூர் பகுதியில் கவனத்தை திசை திருப்பி செல்போன் திருட்டில் ஈடுபட்ட ஆட்டோ ஓட்டுநர் உட்பட 2 நபர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 1 ஆட்டோ மற்றும் 3 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

சென்னை, திருவொற்றியூர், காந்தி நகரைச் சேர்ந்தவர் தங்கச் செல்வம் (60). கடந்த 20.03.2022 அன்று திருவொற்றியூர் அஜாக்ஸ் பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது, அவ்வழியே ஆட்டோவில் வந்த இரண்டு நபர்கள் தங்கச்செல்வத்திடம் ஜீவன்லால் நகருக்கு எப்படி செல்ல வேண்டும் என்று கேட்டுள்ளனர். ஆட்டோவில் வந்து இடத்தை காண்பிக்குமாறு கூறியுள்ளனர். தங்கச்செல்வம் ஆட்டோவில் ஏறிச்சென்று ஜீவன்லால் நகரை காண்பித்து விட்டு ஆட்டோவில் இருந்து இறங்கினார். அப்போது அவரது செல்போன் திருடு போனது தெரியவந்துள்ளது. இது குறித்து தங்கச்செல்வம் திருவொற்றியூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்யப்பட்டது.

திருவொற்றியூர் காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர விசாரணை செய்தனர். அதனையடுத்து தங்கச் செல்வத்திடம் செல்போன் திருடிய தண்டையார்பேட்டையைச் சேர்ந்த பாலாஜி (எ) பாலா (23), ஆட்டோ ஓட்டுநர் ரமேஷ் (28) ஆகிய இருவரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 3 செல்போன்கள் மற்றும் 1 ஆட்டோ ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. விசாரணையில் இவர்கள் திருவொற்றியூர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளுக்கு ஆட்டோவில் சென்று பொதுமக்களிடம் முகவரி கேட்பது போல நடித்து, அவர்களை ஆட்டோவில் ஏற்றிச்சென்று கவனத்தை திசை திருப்பி பொதுமக்களிடமிருந்து செல்போன் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. விசாரணைக்குபின்னர் கைது செய்யப்பட்ட இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.