ஆட்டோவில் குக்கர் குண்டு வெடிப்பு சம்பவம் பயங்கரவாதிகள் சதி; கர்நாடக டிஜிபி டுவிட்டரில் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்
கர்நாடகா மாநிலம், மங்களூருவில் ஆட்டோவில் குக்கர் குண்டு வெடிப்பு சம்பவம் விபத்து அல்ல, அது தீவிரவாத செயல். பலத்த சேதம் விளைவிக்கும் நோக்கத்துடன் நடத்தப்பட்டுள்ளது என்று கர்நாடக டிஜிபி கூறியுள்ளார்.
கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு நகர் நாகுரி பகுதியில் நேற்று மாலை ஆட்டோ ஒன்று சென்று கொண்டிருந்தது. திடீரென்று அந்த ஆட்டோ ‘டமார்’ என்று பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. ஆட்டோவில் குபுகுபுவென தீப்பிடித்தது. இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து ஆட்டோவில் எரிந்த தீயை அணைத்தனர். இதில் ஆட்டோ டிரைவரும், ஒரு பயணியும் பலத்த காயம் அடைந்தனர். அவர்கள் 2 பேரையும் மீட்டு மங்களூரு வென்லாக் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுபற்றிய தகவல் அறிந்ததும் மூத்த போலீஸ் அதிகாரிகளும், தடயவியல் நிபுணர்களும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். இதனால் அங்குப் பதற்றமான சூழல் உருவான நிலையில், மக்கள் அமைதியாக இருக்குமாறு போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர். மேலும், போலீசார் அங்குக் குவிக்கப்பட்டனர்.
ஆட்டோ வெடித்தது எப்படி? என்பது பற்றி ஆய்வு செய்தனர். அப்போது ஆட்டோவில் இருந்து குக்கர் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. குக்கரில் வெடிபொருள் வைக்கப்பட்டிருந்த அடையாளங்கள் இருந்தன. குக்கரை வெடிகுண்டாக செய்து வெடிக்க செய்திருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. தடயவியல் நிபுணர்கள் சோதனை நடத்தியதில் வெடிகுண்டு தயாரிப்பதற்கு பயன்படுத்தக்கூடிய வயர்கள், பேட்டரிகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இந்தச் சம்பவம் விபத்து அல்ல அது பயங்கரவாத செயல் என்று கர்நாடக டிஜிபி பிரவீன் சூட் தனது டுவிட்டர் பக்கத்தில், “உறுதியாகிவிட்டது. நடந்தது விபத்து அல்ல. அது தீவிரவாத செயல். பலத்த சேதம் விளைவிக்கும் நோக்கத்துடன் நடத்தப்பட்டுள்ளது. கர்நாடக போலீஸார் மத்திய அமைப்புகளுடன் இணைந்து விசாரித்து வருகின்றனர்” என்று பதிவிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில், “இந்த தாக்குதலில் காயமடைந்தவர் பேசும் சூழலில் இல்லை. இதுவரை நடந்த விசாரணையில் இது தீவிரவாத தாக்குதல் என்பது உறுதியாகியுள்ளது. உறுதியான தகவல்கள் இன்னும் ஒன்றிரண்டு நாட்களில் கிடைக்கும்” என்று தெரிவித்துள்ளார்.