சிறப்பாகவும் மெச்சத்தக்க வகையில் பணி செய்த சென்னை, மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் எஸ்ஐ பாஸ்கரனுக்கு ஆகஸ்டு மாத நட்சத்திர காவல் விருதுக்கான பாராட்டு சான்றிதழ் மற்றும் ரூ. 5 ஆயிரத்தை வழங்கி கமிஷனர் சங்கர்ஜிவால் பாராட்டினார்.
சென்னை பெருநகர காவல் துறையில் சிறப்பாக பணியாற்றும் காவல் ஆளிநர்களுக்கு அவர்களது நற்பணியை பாராட்டும் விதமாக அவ்வப்போது பாராட்டு சான்றிதழ்களுடன் உரிய வெகுமதியும் வழங்கப்பட்டு வருகிறது. சென்னை நகர தலைமையிட கூடுதல் காவல் ஆணையாளர் லோகநாதன் தலைமையிலான குழு ஒவ்வொரு மாதமும் தீவிரமாக ஆராய்ந்து, சென்னை பெருநகர காவல் துறையில் சிறப்பாகவும் மெச்சத்தக்க வகையிலும் பணி செய்யும் காவல் அதிகாரி அல்லது ஆளிநரை கண்டறிந்து அவர்களது சிறப்பான பணியினை மதிப்பிட்டு “மாதத்தின் நட்சத்திர காவல் விருது” (Police Star of The Month) பெறுவதற்கு தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். ஒவ்வொரு மாதமும் நட்சத்திர காவலர் விருதுக்கு தேர்வு செய்யப்படும் காவல் அலுவலருக்கு ரூ.5,000 பண வெகுமதியுடன் தனிப்பட்ட செயல் திறன் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த ஆகஸ்ட் மாதத்தின் நட்சத்திர காவல்விருதுக்கு சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் எஸ்ஐ பாஸ்கரன் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதனையடுத்து அவருக்கு நட்சத்திர காவல்விருதினை கமிஷனர் சங்கர்ஜிவால் நேரில் அழைத்து வழங்கினார். விருதுக்குறி ரொக்கம் ரூ. 5 ஆயிரம் பணம் வெகுமதி மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கி கமிஷனர் கவுரவித்தார்.
லோன் தருவதாக செல்போன் செயலி மூலம் பணம் பறித்து மோசடி செய்த வழக்கில் சம்பந்தப்பட்ட தீபக் குமார் பாண்டே, ஜித்தேந்தர் தன்வர், நிஷா, பிரகாஷ் சர்மா ஆகிய 4 நபர்களை உத்திரப்பிரதேசம் மற்றும் ஹரியானாவிற்கு சென்று கைது செய்ய பெரிதும் உதவியாக இருந்து மெச்சத்தக்க வகையில் எஸ்ஐ பாஸ்கர் சிறப்பாக பணிபுரிந்துள்ளார்.
மேலும் அதனைத் தொடர்ந்து சென்னை பெருநகர காவல் துறையில் பணிபுரியும் காவல் ஆளிநர்களில் வருகிற 21.09.2022 மற்றும் 26.09.2022 வரையிலான தேதிகளில் பிறந்தநாள் காணும் சென்னை பெருநகர காவல் கூடுதல் ஆணையாளர் (போக்குவரத்து) கபில்குமார் சி. சரட்கர் மற்றும் 32 காவல் அதிகாரிகள், ஆளிநர்கள், அமைச்சு பணியாளர்களை நேரில் அழைத்து வாழ்த்து செய்தியுடன் கூடிய பிறந்தநாள் வாழ்த்து அட்டைகளை கமிஷனர் சங்கர்ஜிவால் வழங்கி, பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தார். இந்நிகழ்ச்சியின்போது கூடுதல் காவல் ஆணையாளர் (தலைமையிடம்) லோகநாதன் உடனிருந்தார்.