68 அரசு பள்ளி மாணவர்களுடன் அமைச்சர் அன்பில் மகேஸ் துபாய் துபாய் புறப்பட்டு சென்றார்.
கடந்த ஆண்டு அரசு பள்ளியில் 10ம் வகுப்பு படித்த மாணவர்களுக்கு வாரந்தோறும் வினாடி வினா போட்டி நடத்தப்பட்டது. பள்ளி அளவில் வெற்றி பெற்ற மாணவர்கள் மாவட்ட அளவில் நடைபெற்ற போட்டிகளில் கலந்து கொண்டனர். அதில் சிறப்பாக பங்காற்றிய மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்கள் அனைவரையும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் துபாய் அழைத்து செல்ல பள்ளிக் கல்வித்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் அப்போது ஒமிக்ரான் வைரஸ் பரவல் காரணமாக அந்த பயணம் ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் அப்போது தேர்தெடுக்கப்பட்ட மாணவர்கள் அனைவரும் 11 ம் வகுப்பு சென்று விட்ட நிலையில் அவர்களை ஊக்குவிக்கும் வகையில் ஒத்தி வைக்கப்பட்ட துபாய் பயணத்தை தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களு டன் இன்று மேற்கொள்ளப்பட்டது. தமிழ்நாடு முழுவதுமிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 68 மாணவர்கள் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் இன்று காலை திருச்சி யிலிருந்து விமானம் மூலம் துபாய்க்கு 4 நாட்கள் கல்வி சுற்றுலாவாக புறப்பட்டு சென்றனர்.
அப்போது அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் கூறியதாவது: மாணவ, மாணவிகளுக்கு எந்த திறமையாக இருந்தாலும் அதனை ஊக்குவித்து, அரசு சார்பில் அவர்களுக்கு உரிய அங்கீகாரம் பெற்றுத் தர நடவடிக்கை எடுக்கப்படும். இன்று துபாய் செல்வது, பள்ளி மாணவர்களுக்கு புதிய அனுபவமாக அமையும். நாம் பள்ளியில் படிக்கும் போது, பக்கத்தில் இருக்கும் மாவட்டத்துக்குத்தான் சுற்றுலா அழைத்துச் செல்வார்கள். ஆனால் தற்போது தமிழக அரசால், பள்ளி மாணவர்கள் வெளிநாட்டுக்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்படுகிறார்கள். அவர்கள் அனைவரையும் பத்திரமாக அழைத்துச் சென்று பத்திரமாக அழைத்து வர வேண்டியது என்னுடைய பொறுப்பு. இந்த 4 நாட்களுக்கும் அவர்களுக்கு தாயாவும் தந்தையுமாக நான்தான் இருக்கப்போகிறேன். இந்தச் சுற்றுலாவுக்கு தமிழக அரசிடம் அனுமதி மட்டும்தான் பெற்றுள்ளோம். இது சிஎஸ்ஆர் நடவடிக்கை மூலம் அழைத்துச் செல்லப்படும் சுற்றுலா. இவ்வாறு அவர் கூறினார்.
மாணவர்களின் பாதுகாப்புக்காக 5 ஆசிரியர்கள், பள்ளிக்கல்வி இணை இயக்குநர் சி.அமுதவல்லி உள்பட 3 அதிகாரிகள் என மொத்தம் 76 பேர் துபாய்க்கு பயணம் மேற்கொண்டனர். வருகிற 13-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) வரை துபாயில் இருக்கும் அவர்கள், அங்கு ஷார்ஜாவில் நடைபெற்று வரும் பன்னாட்டு புத்தக திருவிழாவிலும் பங்கு பெற உள்ளது குறிப்பிடத்தக்கது.