அரசு தங்கும் விடுதியில் மாணவர்களுக்கு திடீர் வாந்தி, மயக்கம் ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை, வடபழனி, திருநகர், ஹாஸ்டல் சாலையில், பிற்படுத்தப்பட்டடோர் நலத்துறை மாணவர்கள் தங்கும் விடுதி உள்ளது. அரசு கல்லூரிகளில் படிக்கும் ஏராளமான மாணவர்கள் இங்கு தங்கி படித்து வருகின்றனர். நேற்று இரவு 10 மணியளவில் இரவு உணவு சாப்பிட்டனர். சிறிது நேரத்தில் மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம், வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த விடுதி நிர்வாகம் அவர்களை ஆட்டோ மூலமாக கேகே நகர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள் மேல் சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வடபழனி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். உணவு ஒவ்வாமை காரணமாக உடல் நலம் பாதிப்படைந்திருக்கலாம் என தெரிகிறது.