Take a fresh look at your lifestyle.

அரசு கஜானாவை காலி செய்யாமல் இருந்திருந்தால் குடும்பத் தலைவிக்கு ரூ. 1000 திட்டத்தை செய்து முடித்திருப்போம் ஈரோடு பிரச்சாரத்தில் முதல்வர் ஸ்டாலின்

78

அரசு கஜானாவை அண்ணா தி.மு.க. ஆட்சியில் காலி செய்யாமல் இருந்திருந்தால் குடும்பத் தலைவிக்கு ரூ.1000 வழங்கும் திட்டத்தை இந்நேரம் செய்து முடித்திருப்போம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

ஈரோடு கிழக்கு தொகுதி பெரியார் நகர் பகுதி தேர்தல் பிரச்சாரத்தில் ஸ்டாலின் பேசியதாவது: இந்த கூட்டணி என்பது ஏதோ தேர்தலுக்காக உருவாக்கப்பட்ட கூட்டணி மட்டுமல்ல. நாட்டிற்காக, கொள்கைக்காக, லட்சியத்திற்காக, நம்முடைய இனம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காக, நம் மொழி பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காக, நம் நாடு பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்ட கூட்டணிதான் இது. நம்மை எதிர்த்து ஒரு கூட்டணி இருக்கிறது. ஆனால் அந்த கூட்டணிக் கட்சியின் தலைவர்கள் புகைப்படங்களை போஸ்டர்களில் போடக்கூடாது, பேனர்களில் போடக்கூடாது. அதுதான் அவர்கள் கூட்டணி. நான் கேட்கிறேன், இன்றைக்கு வரைக்கும் அந்த எடப்பாடி பழனிச்சாமி அண்ணா தி.மு.க.வின் சார்பில் நிறுத்தப்பட்டிருக்கும் வேட்பாளரை ஆதரித்து பேசுகிறபோது எங்காவது பிரதமர் மோடி பெயரை பயன்படுத்தி இருக்கிறாரா?

இனி நீங்கள் மோடி பெயரைப் பயன்படுத்தினாலும், பயன்படுத்தவில்லை என்றாலும் டெபாசிட் வாங்கப் போவதில்லை, அது வேறு. ஆனால் அவர்கள் போட்டியே இப்போது என்னவென்றால், ஏற்கனவே வாங்கிய ஓட்டுக்களையாவது இப்போது வாங்கவேண்டும். இல்லையென்றால் இரண்டாவது இடத்திற்காவது வர வேண்டும். டெபாசிட் தொகையை பெற வேண்டும் என்பதில்தான் இன்றைக்கு அவருடைய கவலையாக இருக்கிறதே தவிர, ஏதோ வெற்றிபெறப் போகிறோமம் என்ற அந்த நினைப்பு இல்லை. கலைஞர் ஐந்து முறை தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த நேரத்தில், அவர் தேர்தலை சந்தித்தபோதெல்லாம் என்ன உறுதிமொழிகளை, வாக்குறுதிகளை தேர்தல் அறிக்கை புத்தகத்தில் திருக்குறள் போன்று இரண்டு வரி இருக்கும். ‘சொன்னதைச் செய்வோம், செய்வதைச் சொல்வோம்‘, இதுதான் கலைஞரின் வாசகம். கலைஞருடைய மகன் ஸ்டாலினின் வாசகம் என்னவென்று தெரியுமா? ‘சொன்னதை மட்டுமல்ல, சொல்லாததையும் செய்வோம்‘.

நீங்கள் பார்க்கலாமே, தேர்தல் நேரத்தில் அறிவித்த திட்டங்களை மட்டுமா செய்து கொண்டிருக்கிறோம். அறிவித்த திட்டங்களிலேயே கொஞ்சம் பாக்கி இருக்கிறது, நான் இல்லை என்று சொல்லவில்லை. 85 சதவீதம் நிறைவேற்றி விட்டோம். இன்னும் மீதம் 15 சதவீதம் மட்டுமே இருக்கிறது. நான் இல்லை என்று மறுக்கவில்லை. ஐந்து வருட காலம் இருக்கிறது. ஐந்து வருடம் மக்கள் நம்மிடத்தில் நம்பிக்கையோடு வாக்களித்து, ஆதரவு தந்து பொறுப்பை ஒப்படைத்திருக்கிறார்கள். நீங்கள் அந்த ஐந்து வருடம் ஆகுமா? என்று நினைக்காதீர்கள். அதற்கு முன்னதாகவே, மூன்று வருடத்தில் பாருங்கள், எல்லா வற்றையும் செய்துவிட்டோம் என்று சொல்கிறோமா இல்லையா என்று பாருங்கள்.
நெருங்கி விட்டோம். இன்னும் என்ன இருக்கிறது? ஒன்றே ஒன்றுதான் முக்கியமானது. மிஸ்டர் எடப்பாடி பழனிசாமி, நீங்கள் மறந்தாலும் நாங்கள் மறக்க மாட்டோம். அதை நாங்கள் மறக்கவே மாட்டோம். எனவே அந்த உரிமைத் தொகையைக்கூட நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் கொடுத்திருப்போம். எப்படி கொரோனாவுக்காக 4000 ரூபாய் கொடுப்போம் என்று சொன்னோம். கொடுத்தோமா? இல்லையா? உடனே கொடுத்தோமா? இல்லையா? முதல் கையெழுத்தே அதுதானே. அடுத்த கையெழுத்து என்ன? இரண்டாவது உறுதிமொழி என்ன கொடுத்தோம்? இலவசமாக மகளிர் பேருந்தில் பயணம் செய்யலாம் என்று உறுதிமொழி தந்தோம். அதுதானே இரண்டாவது கையெழுத்து.

எனவே சொன்னது எல்லாம் செய்து கொண்டிருக்கிறோமா? இல்லையா? சொல்லாத திட்டம் என்று பார்த்தால், ஒன்று இரண்டு இருக்கிறது. அது நீங்கள் நிதியை மட்டும் ஒழுங் காக வைத்துவிட்டு சென்றிருந்தீர்கள் என்றால், எந்தக் கடனும் இல்லாமல், கொள்ளை அடிக்காமல், ஒழுங்காக கஜானாவை காலி செய்யாமல் வைத்துவிட்டு சென்றிருந்தீர்கள் என்றால் நாங்கள் இந்நேரம் அதை செய்து முடித்திருப்போம். இவ்வளவு கஷ்டத்திலும், இவ்வளவு நிதிப் பற்றாக்குறையிலும், இவ்வளவு சாதனைகளையும், எப்படி செய்ய முடிகிறது என்று எல்லா மாநிலங்களும் இன்றைக்கு நம்மை பாராட்டுகிறது.

ஆயிரம் ரூபாய் குடும்பத் தலைவிகளுக்கு கொடுக்கும் திட்டத்தைப் பொறுத்தவரையில் விரைவில் நிறைவேற்றப் போகிறோம், நிறைவேற்றப் போகிறோம் என்று தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறோம். மார்ச் மாதம் இரண்டாவது வாரம் பட்ஜெட் கூட்டம். எனவே அந்த பட்ஜெட் கூட்டத்தில் எப்போது அது வரும்? எந்த தேதியில் கொடுக்கப்படும்? என்பதை திட்டவட்டமாக நாங்கள் அறிவிக்க இருக்கிறோம். யாரும் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. இன்றைக்கு இந்த கூட்டணியை பொறுத்தவரையில் ஒரு கொள்கை அளவில் அமைந்திருக்கும் கூட்டணி, நாடாளுமன்றத்தில் கூட்டணி அமைத்தோம். சட்டமன்றத் தேர்தலிலும் அமைத்து வெற்றி பெற்றோம். உள்ளாட்சி அமைப்புத் தேர்த லிலும் அந்த கூட்டணி தொடர்ந்தது. மிகப்பெரிய வெற்றியை பெற்றோம். இப்போதும் இந்த இடைத்தேர்தலில் அந்த கூட்டணி தொடர்கிறது. இந்த இடைத்தேர்தலில் மட்டுமல்ல, அது வரவிருக்கின்ற நாடாளுமன்றத் தேர்தலாக இருந்தாலும், அது எந்த தேர்தலாக இருந்தாலும் இந்த கூட்டணி தொடரும்.

அதுவல்ல முக்கியம். ஆனால் கொள்கை அளவில் இன்றைக்கு இருக்கிறோமா? இல்லையா? தி.மு.க., காங்கிரஸ், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, விடுதலை சிறுத்தைகள், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, ஆதித்தமிழர் பேரவை. இவ்வாறு பல்வேறு தோழமைக் கட்சிகளுடன் ஒருங்கிணைந்து இன்றைக்கு நாம் தேர்தல் களத்தில் நிற்கிறோம் என்று சொன்னால், இந்த நாடு காப்பாற்றப்பட வேண்டும், இந்த மொழி காப்பாற்றப்பட வேண்டும் என்பதற்காகத்தான் இந்த கூட்டணி தொடர்கிறது என்பதை நீங்கள் மறந்து விடக்கூடாது. உங்களை எல்லாம் நான் மீண்டும் மீண்டும் கேட்டுக்கொள்ள விரும்புவது கை சின்னத்திற்கு அளிக்கும் வாக்கு என்பது இந்த ஆட்சிக்கு நீங்கள் அங்கீகாரத்தை வழங்கக்கூடிய ஒரு ஆதரவாக நிச்சயமாக அமைந்திட முடியும்.

அதிலும் குறிப்பாக பெண்களுக்கு எத்தனையோ சிறப்பான திட்டங்களை எல்லாம் கொண்டு வந்து நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோம். ஏற்கனவே நாம் ஆட்சிப் பொறுப்பில் இருந்த நேரத்தில்தான் சொத்தில் பெண்களுக்கு சம உரிமை, வேலை வாய்ப்பில் பெண்களுக்கு 30 சதவீத இட ஒதுக்கீடு (இப்போது 40%), உள்ளாட்சி அமைப்புகளில் 33 சதவீதம், இப்போது 50 சதவீதம் இடஒதுக்கீடு. இவ்வாறு எத்தனையோ திட்டங்களை சொல்ல முடியும். மகளிர் சுய உதவிக்குழுக்களை உருவாக்கி, அவர்கள் வாழ்க்கையில் வளத்தை, வசந்தத்தை ஏற்படுத்துவதற்காக எத்தனையோ நிதி ஒதுக்கீடுகளை செய்து கொண்டிருக்கிறோம்.

பள்ளியில் படித்து கல்லூரிக்குச் செல்ல முடியாத நிலையில் தவித்துக் கொண்டிருந்த சூழ்நிலையில் தவித்துக் கொண்டிருந்த குடும்பங்கள். அந்தக் குடும்பத்தின் நிலை அறிந்த காரணத்தால்தான் அந்த மாணவியருக்கு, கல்லூரிக்கு போகின்ற நேரத்தில் ஆயிரம் ரூபாய் வழங்கும் ஒரு அற்புதமான திட்டத்தை ‘புதுமைப்பெண்‘ திட்டத்தின் மூலமாக இன்றைக்கு நாம் நிறைவேற்ற முன்வந்திருக்கிறோம். எனவே இவ்வாறு பல திட்டங்களை பெண்களுக்காக, மகளிருக்காக கொண்டு வந்திருக்கும் திட்டங்களை எல்லாம் அங்கீகாரம் பெற வேண்டும் என்று சொன்னால் அதற்கு இந்த தேர்தலை நீங்கள் எல்லாம் நல்ல வகையில் பயன்படுத்த வேண்டும். நம் வெற்றி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு கை சின்னத்தில் ஆதரவு தந்து மிகப்பெரிய வெற்றியை தேடி தர வேண்டும்.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.