சுப்ரீம் கோர்ட் வளாகத்தில் நடைபெற்ற அரசியல் சாசன தின விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று இணையதள நீதிமன்றங்கள், செயலி ஆகியவற்றை தொடக்கி வைத்தார்.
விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: மும்பை பயங்கரவாத தாக்குதல் நினைவு தினம் இன்று.கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு , அரசியல்சாசனத்தையும் குடி மக்களின் உரிமையையும் கொண்டாடிய போது, மனித குலத்தின் எதிரிகள் இந்தியாவின் மீது பெரிய பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறேன். இன்றைய சர்வதேச சூழலில், ஒட்டுமொத்த உலகத்தின் பார்வை இந்தியா மீது திரும்பி உள்ளது. அதிவேகமாக இந்தியா வளரும் போது, அதிவேகமாக பொருளாதாரமாக இந்தியா உள்ள நிலையில், ஒட்டு மொத்த உலகமும் இந்தியாவை பெரிய எதிர்பார்ப்புடன் பார்த்து வருகின்றன.
இந்தியா முன்பு புதிய வாய்ப்புகள் வந்து கொண்டுள்ளன. அனைத்து தடைகளையும் தாண்டி இந்தியா முன்னேறி வருகிறது. இன்னும் ஒருவாரத்தில் ஜி-20 அமைப்பின் தலைமைப் பதவியில் இந்தியா அமர உள்ளது. நாம் அனைவரும் இந்தியாவின் மதிப்பை உலக நாடுகள் முன் உயர்த்தி, பங்களிப்பை கொண்டு வர வேண்டும். அரசிய லமைப்பின் முன்னுரையில் உள்ள ‘நாங்கள் மக்கள் என்பது, இந்தியாவை ஜனநாயகத்தின் தாயாக மாற்றிய உறுதிமொழி மற்றும் நம்பிக்கையாக உள்ளது. சரியான நேரத்தில் அனைவ ருக்கும் நீதி கிடைப்பதை உறுதி செய்வதற்காக துவங்கப்பட்டுள்ள மின்னணு முயற்சிகள் போன்ற பல நடவடிக்கைகளை நீதித்துறை மேற்கொண்டு வருகிறது ஏழைகளுக்கு ஆதரவான கொள்கைகள், நாட்டின் ஏழைகள் மற்றும் பெண்களை கைதூக்கிவிடுவதற்கு உதவுகிறது. சாமானிய மக்களுக்காக சட்டங்கள் எளிமைபடுத்தப்பட்டுள்ளன. உரிய நேரத்தில் நீதி கிடைப்பதை உறுதி செய்ய நீதித்துறை நடவடிக்கை எடுக்கிறது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
விழாவில் மெய்நிகர் நீதி கடிகாரம், ‘ஜஸ்ட் ஐஎஸ்’ கைப்பேசி செயலி 2.0, எண்ம (டிஜிட்டல்) நீதிமன்றம், ‘எஸ்3வாஸ்’ வலைதளம் ஆகிய நீதித்துறை தொடர்பான சேவைகளை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்த விழாவில் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு மற்றும் உச்சநீதிமன்ற மூத்த நீதிபதிகள் உள்ளிட்டோரும் பங்கேற்றுள்ளனர்.
இந்த நிலையில், அரசியலமைப்புச் சட்டத்தை வழங்கிய பெருமக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி மரியாதை செலுத்தும் வகையில், தேசத்திற்கான அவர்களின் தொலைநோக்குப் பார்வையை நிறைவேற்றுவதற்கான உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார். இதுகுறித்து பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் “இன்று, அரசியலமைப்பு தினத்தில், நமது அரசியலமைப்பை நமக்கு வழங்கிய பெருமக்களுக்கு நாங்கள் மரியாதை செலுத்துகிறோம். மேலும் நமது தேசத்திற்கான அவர்களின் பார்வையை நிறைவேற்றுவதற்கான எங்கள் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்துகிறோம்” என்று குறிப்பிட்டிருந்தார்.
1949ம் ஆண்டு நவம்பர் 26 ம் தேதி அரசியல் சாசனம் நாடாளுமன்றத்தால் முறைப்படி ஏற்றுக்கொள்ளப்பட்டதை நினைவில் கொள்ளும் வகையில், கடந்த 2015-ம் ஆண்டு முதல் இன்றைய தினம் அரசியல் சாசன தினமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. முன்னர், தேசிய சட்ட தினமாக கடைப்பிடிக்கப்பட்டது.