மணிப்பூர் கவர்னரும், மேற்கு வங்காள பொறுப்பு கவர்னருமான இல.கணேசன் இல்ல விழா, இன்று சென்னையில் நடக்கிறது. இதில் கலந்து கொள்வதற்காக மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா பானர்ஜி நேற்று சென்னை வந்தார். பின்னர் அவர் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முதல்வர் ஸ்டாலின் வீட்டிற்கு சென்று அவரை சந்தித்து பேசினார். பின்னர் நிருபர்களிடம் முதல்வர் ஸ்டாலின் கூறியதாவது: ‘‘மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா பானர்ஜி பலமுறை சென்னைக்கு வந்துள்ளார். கருணாநிதி உருவச்சிலையை முரசொலி அலுவலகத்தில் அவர் திறந்து வைத்தது தி.மு.க.வையும், தமிழகத்தையும் பெருமைப்படுத்தியது. என்னை மரியாதை நிமித்தமாகவே அவர் சந்தித்தார். நீங்கள் அவசியம் மேற்கு வங்காளத்துக்கு விருந்தினராக வரவேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார். அந்த அழைப்பை நானும் ஏற்றுக் கொண்டுள்ளேன். நாடாளுமன்ற தேர்தல் பற்றியோ, அரசியல் பற்றியோ எதுவும் பேசவில்லை’’. இவ்வாறு அவர் கூறினார்.