சென்னையிலுள்ள அமெரிக்க தூதரகத்தில் போலியான ஆவணங்கள் சமர்ப்பித்து விசா பெற முயன்ற பெங்களுரைச் சேர்ந்த இருவரை போலீசார் கைது செய்தனர்.
கர்நாடக மாநிலம் பெங்களுரைச் சேர்ந்தவர்கள் ஞான கிறிஸ்டோபர் (49), சின்னராஜ் (32). அமெரிக்கா செல்வதற்காக வேண்டி நேற்று (10.03.2023) சென்னையிலுள்ள, அமெரிக்க தூதரகத்தில் நடந்த நேர்முக தேர்வில் கலந்து கொண்டனர். ஞானகிறிஸ்டோபர் என்பவரின் மனைவி விஜயநிர்மலா என்பவருக்கு புற்றுநோய் இருப்பதாகவும் அதற்காக அமெரிக்காவில் உள்ள MAYO CLINIC மருத்துவமணையில் சிகிச்சை பெறுவதற்காகவும் அவருக்கு உதவிக்காகவும் மேற்படி இருவரும் தங்களுக்கு அதிக அளவில் வங்கி இருப்பு உள்ளதாக போலியான வங்கி கணக்கு சான்று, போலியாக தயார் செய்து சமர்ப்பித்துள்ளனர். இது குறித்து அறிந்த அமெரிக்க தூதரக அதிகாரிகள் அது தொடர்பாக சென்னை நகர போலீஸ் கமிஷனர் சங்கர்ஜிவாலிடம் புகார் அளித்தனர். மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
அதனையடுத்து மத்தியக் குற்றப்பிரிவு, போலி ஆவண புலனாய்வு பிரிவு, காவல் உதவி ஆய்வாளர் விஜயசேகரன் தலைமையிலான குழுவினர் தீவிர விசாரணை செய்து மேற்படி போலி ஆவணங்கள் மூலம் விசா பெற முயன்ற எதிரிகள் ஞான கிறிஸ்டோபர், சின்னராஜ் இருவரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.