திமுக முன்னாள் பொதுச் செயலாளர் அன்பழகனின் நூற்றாண்டு விழாவையொட்டி, 100 சிறப்புப் பொதுக்கூட்டங்கள் நடத்த தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது.
பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, கனிமொழி எம்.பி. மற்றும் மாவட்ட செயலாளர்கள் மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, மாதவரம் சுதர்சனம் உள்பட மாநிலம் முழுவதிலும் உள்ள 72 மாவட்டச் செயலாளர்களில் 70 பேர் கலந்துகொண்டனர். இந்தக் கூட்டத்தில், வருகின்ற டிசம்பர் 19 -ம் தேதி நடைபெறவுள்ள பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழாவையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதுதொடர்பாகவும், வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு தயாராவது, கூட்டணி, பூத் கமிட்டி அமைத்தல் குறித்தும், புதிதாக உருவாக்கப்பட்ட அணிகள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:- பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவைப் போற்றும் வகையில் 19 -ந்தேதி தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறை செயல்படும் டி.பி.ஐ. வளாகத்தில் பேராசிரியரின் திருவுருவச் சிலை நிறுவி, அந்த வளாகம் “பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகம்” என்று அழைக்கப்படும் எனவும், கற்றல், கற்பித்தல், ஆசிரியர் திறன் மேம்பாடு, தலைமைத்துவம், மாணவர் வளர்ச்சி என பன்முக வளர்ச்சியினை வெளிப்படுத்தும் சிறந்த பள்ளிகளுக்கு பேராசிரியர் பெயரில் விருது வழங்கப்படும்.
தன் வாழ்நாள் முழுவதும் அப்பழுக்கற்ற கொள்கைக் கோபுரமாக உயர்ந்து நின்றவர் பேராசிரியர். பாராளுமன்றத்தில் மக்களவை உறுப்பினராக இருந்து, இன-மொழி உரிமைக்காகக் குரல் கொடுத்தவர். சட்டப்பேரவையில் ஆளுங்கட்சி-எதிர்க்கட்சி என இரு வரிசைகளிலும் உறுப்பினராக இருந்து ஜனநாயக மாண்பு காத்தவர். சட்ட மேலவை உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டு, தன் பங்களிப்பை நிறைவேற்றியவர் பேராசிரியர். கருணாநிதி தலைமையிலான கழக ஆட்சிக்காலங்களில் மக்கள் நல்வாழ்வுத்துறை, சமூக நலத்துறை, நிதித்துறை, கல்வித்துறை உள்ளிட்ட துறைகளுக்கு அமைச்சராக இருந்து மக்களுக்கானத் திட்டங்களை திறம்பட நிறைவேற்றியவர். தள்ளாத வயதிலும், தளராத தத்துவச் சிந்தனைகளுடன் கடைசி மூச்சு வரை கழகத்திற்காகவே வாழ்ந்த பேராசிரியரின் நூற்றாண்டு தொடக்க விழாவை கடந்த ஆண்டில் தொடங்கி, தொடர்ந்து நடத்தி அவரது பொதுவாழ்வுக்கு புகழ் மாலை சூட்டியிருக்கிறது தி.மு.க.
நூற்றாண்டு நிறைவு விழாவினையொட்டி, தலைமைக் கழகத்தின் சார்பில் வருகிற 15-ந்தேதி (வியாழக்கிழமை) அன்று தமிழ்நாடு முழுவதும் 100 பொதுக்கூட்டங்கள் நடத்த தலைமைக் கழகத்தின் சார்பில் அறிவிக்கப்படும் அந்த கூட்டங்களை மாவட்டக்கழகச் செயலாளர்கள் சிறப்புடன் நடத்திட வேண்டும். அதே போல் சென்னையில் அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் டிசம்பர்-17 (சனிக்கிழமை) அன்று பேராசிரியரின் பொது வாழ்வைப் போற்றிடும் கவியரங்கம் நடைபெறும். டிசம்பர்-18 (ஞாயிற்றுக்கிழமை) அன்று வடசென்னையில், மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தலைவர்கள் பங்கேற்கும் மாபெரும் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம் நடைபெறும். பேராசிரியரின் பிறந்த நாளான 19-ந்தேதி (திங்கட்கிழமை) அன்று மாவட்ட-, ஒன்றிய, -நகர, -பகுதி, -பேரூர் -கிளைக் கழகங்களின் சார்பிலும், துணை அமைப்புகளான அணிகள் சார்பிலும் பேராசிரியரின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்திடவும் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.