சென்னை, அடையாறு ஆற்றில் 9ம் வகுப்பு மாணவன் மூழ்கி உயிரிழந்தான். அவனது உடலை 18 மணிநேர போராட்டத்திற்கு பின் தீயணைப்புத் துறையினர் மீட்டு உறவினர் களிடம் ஒப்படைத்தனர்.
சென்னை சைதாப்பேட்டையில் உள்ள திடீர் நகர் பகுதியை சேர்ந்த உன்னி கிருஷ்ணன் வனிதா ஆகியோரது மகன் சாமுவேல் (வயது 14) அங்குள்ள பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்த சாமுவேல் பள்ளி முடித்துவிட்டு நண்பர்கள் சஞ்சய், ஹரிதாஸ் ஆகியோருடன் நேற்று மாலை 5 மணி அளவில் அருகில் இருந்த கூவம் ஆற்றில் குளிப்பதற்காக சென்று உள்ளனர்.
அப்போது சாமுவேல் மட்டும் தண்ணீருக்கு அடியில் இருக்கக்கூடிய புதைக் குழியில் மாட்டிக் கொண்டு மூழ்கியதை அடுத்து உடன் இருந்த நண்பர்கள் அப்பகுதி மக்களிடம் தகவல் தெரிவித்துள்ளனர். அதன் பின்னர் அப்பகுதி மக்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சைதாப்பேட்டை தியாகராய நகர் அசோக் நகர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்த 50-க்கும் மேற்பட்ட தீயணைப்பு துறை வீரர்கள் விரைந்து வந்து படகு மூலம் தண்ணீரில் மூழ்கிய மாணவனை தேடும் பணியில் ஈடுபட்டனர். இரவு முழுவதும் தேடும் பணியில் ஈடுபட்டும் மாணவனை கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்நிலையில் தென் மண்டல தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறை அதிகாரி ராபின் தலைமையில் 50க்கும் மேற்பட்ட தீயணைப்பு துறை வீரர்கள் இரண்டாவது நாளாக இன்று காலை முதல் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். தீயணைப்பு வீரர்கள் 18 மணி நேரமாக தேடும் பணியில் ஈடுபட்டு மாணவனின் உடலை மீட்டனர். பின்னர் மாணவனின் உடலை பிரேத பரிசோதனைக்காக காவலர்களிடம் ஒப்படைத்தனர். அதைத் தொடரந்து உடல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.