Take a fresh look at your lifestyle.

அடிலெய்டு சர்வதேச டென்னிஸ்: சாம்பியன் பட்டம் வென்ற ஜோகோவிச், சபலென்கா

73

அடிலெய்டு சர்வதேச டென்னிசில் முன்னணி நட்சத்திரங்கள் ஜோகோவிச், சபலென்கா சாம்பியன் பட்டத்தை வென்றனர்.

அடிலெய்டு சர்வதேச டென்னிஸ் போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்து வந்தது. இதில் நேற்றிரவு அரங்கேறிய ஆண்கள் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் முன்னாள் ‘நம்பர் ஒன்’ வீரர் நோவக் ஜோகோவிச்(செர்பியா), 33-ம் நிலை வீரரான அமெரிக்காவின் செபாஸ்டியன் கோர்டாவை எதிர்கொண்டார்.

தொடக்கத்தில் தடுமாறிய அனுபவம் வாய்ந்த ஜோகோவிச் முதல் செட்டை இழந்து 2-வது செட்டில் 5- 6 என்று தோல்வியின் விளிம்புக்கு வந்தார். அதன் பிறகு எதிராளியின் ‘மேட்ச் பாயிண்ட்’ ஆபத்தில் இருந்து தற்காத்துக் கொண்ட ஜோகோவிச் டைபிரேக்கர் வரை போராடி 2-வது செட்டை வசப்படுத்தினார். அதைத் தொடர்ந்து 3-வது செட்டை தனதாக்கிய ஜோகோவிச் 6- 7 (8- 10), 7- 6 (7- 3), 6- 4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் கோப்பையை தட்டிச் சென்றார். இந்த மோதல் 3 மணி 9 நிமிடங்கள் நீடித்தது. அவருக்கு பரிசுத்தொகையாக ரூ.78 லட்சம் கிடைத்தது. அரைஇறுதியின் போது லேசான தசைப்பிடிப்பால் அவதிப்பட்ட ஜோகோவிச் இறுதி சுற்றில் ஒரு வழியாக அதை சமாளித்து விட்டார்.

அடிலெய்டில் அவர் வென்ற 2-வது பட்டம் இதுவாகும். இதற்கு முன்பு 2007-ம் ஆண்டில் இங்கு வாகை சூடியிருந்தார். மொத்தத்தில் அவருக்கு இது 92-வது சர்வதேச ஒற்றையர் பட்ட மாகும். 35 வயதான ஜோகோவிச் கூறுகையில், ‘இன்றைய ஆட்டத்தை பார்த்து ஒவ்வொரு வரும் உற்சாகம் அடைந்திருப்பார்கள் என்று நம்புகிறேன். இது வியப்புக்குரிய வாரமாக அமைந்தது’ என்றார். தோல்வி அடைந்த 22 வயதான கோர்டா 1998-ம் ஆண்டில் ஆஸ்திரேலிய ஓபனை வென்ற பெட் கோர்டாவின் மகன் ஆவார்.

பெண்கள் ஒற்றையர் பிரிவில் 5-ம் நிலை வீராங்கனை அரினா சபலென்கா (பெலாரஸ்) 6- 3, 7- 6 (7- 4) என்ற நேர் செட் கணக்கில் தகுதி நிலை வீராங்கனையான லின்டா நோஸ் கோவாவை (செக்குடியரசு) சாய்த்து தனது 11-வது சாம்பியன் கோப்பையை வென்றார். இதே ஆஸ்திரேலியாவின் சிட்னியில் நடந்த யுனைடெட் கோப்பை டென்னிசின் இறுதி ஆட்டத்தில் அமெரிக்கா 4- 0 என்ற கணக்கில் இத்தாலியை வீழ்த்தி மகுடம் சூடியது. அமெரிக்க அணியில் டெய்லர் பிரைட்ஸ், பிரான்சிஸ் டியாபோ, ஜெசிகா பெகுலா, மேடிசன் கீஸ் ஆகியோர் தங்களது ஆட்டங்களில் வெற்றியை தேடித்தந்தனர்.