தமிழ்நாடு அரசு தயாரித்து கவர்னரால் இசைவளிக்கப்பட்டு, அச்சிடப்பட்ட உரையை கவர்னர் முழுமையாக படிக்காதது வருந்தத்தக்கது; சட்டமன்ற மரபுகளை மீறியதாகும் என்று சட்டசபையில் முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார்.
உறுப்பினர்களுக்கு அச்சிடப்பட்டு வழங்கப்பட்ட ஆங்கில உரை மற்றும் சபாநாயகர் படித்த தமிழ் உரை மட்டுமே அவை குறிப்பில் ஏற வேண்டும் என்று முதலமைச்சர் தீர்மானம் கொண்டு வந்தார்.
அச்சிட்ட பகுதிகளுக்கு மாறாக கவர்னர் இணைத்தும், விடுத்தும் படித்த பகுதிகள் இடம் பெறாது என்றும் தீர்மானத்தை முதலமைச்சர் சட்டசபையில் முன்மொழிந்தார். தமிழக சட்டசபையில் கவர்னர் இன்று உரை நிகழ்த்தினார். கவர்னர் ஆரம்பத்தில் சில நிமிடம் தமிழிலும், பின்னர் ஆங்கிலத்திலும் உரை நிகழ்த்தினார். அப்போது ‘அமைதிப்பூங்கா’ உட்பட சில வார்த்தைகளை அவர் படிக்காமல் தவிர்த்தார். அவர் படித்து முடித்ததும் கவர்னரின் ஆங்கில உரையின் தமிழாக்கத்தை சபாநாயகர் படித்தார். அப்போது கவர்னரும் அவரது இருக்கையில் அமர்ந்திருந்தார்.
சபாநாயகர் படித்து முடிந்ததும் முதலமைச்சர் ஸ்டாலின் எழுந்து பேசினார். முதலமைச்சர் ஸ்டாலின், கவர்னர் உரையின் மீதான தீர்மானத்தினை முன்மொழிந்து சட்டமன்றப் பேரவை யில் பேசியதாவது:
கவர்னருக்கு வரைவு உரையானது, தமிழ்நாடு அரசாங்கத்தால் ஏற்கெனவே அனுப்ப ப்பட்டு, அவரால் ஏற்பளிக்கப்பட்டு, அதன்பின்னர் அச்சடிக்கப்பட்டு இன்றைக்கு அனைத்து உறுப்பினர்களுக்கும் கணினியிலும், தேவைப்படும் உறுப்பினர்களுக்கு அச்சிட்ட பிரதி களாகவும் வழங்கப்பட்டுள்ளன. நம்முடைய திராவிட மாடல் கொள்கைகளுக்கு முற்றிலும் மாறாக செயல்பட்டு வரும் கவர்னருடைய செயல்பாடுகள், முற்றிலும் ஏற்றுக்கொள்ள இயலாத நிலையில், அரசின் சார்பாக இருக்கின்ற காரணத்தால், நாங்கள் சட்டமன்றப் பேரவை விதிகளைப் பின்பற்றி, கவர்னர் உரையைத் தொடங்குவதற்கு முன்னர் எங்களது எதிர்ப்பு எதனையும் நாங்கள் பதிவு செய்யவில்லை.
பேரவையிலே மிகவும் கண்ணியத்தோடு, அரசமைப்புச் சட்டத்தின்கீழ் உரையாற்ற வந்துள்ள கவர்னருக்கு முழு மரியாதை அளிக்கும் வகையில் நாங்கள் நடந்து கொண்டோம். ஆனாலும், எங்களது கொள்கைகளுக்கு மாறாக மட்டுமல்ல அரசின் கொள்கைகளுக்கே கூட அவர் மாறாக நடந்து கொண்டு, தமிழ்நாடு அரசு தயாரித்து, கவர்னரால் இசைவளிக்கப்பட்டு, அச்சிடப்பட்ட உரையை முறையாக, முழுமையாகப் படிக்காதது மிகவும் வருந்தத்தக்கது மட்டுமல்ல, சட்டமன்ற மரபுகளை மீறிய ஒன்றும் ஆகும். ஆகவே, சட்டமன்றப் பேரவை விதி 17-ஐத் தளர்த்தி, இன்றைக்கு அச்சிடப்பட்டு, உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஆங்கில உரை மற்றும் பேரவைத் தலைவரால் படிக்கப்பட்ட தமிழ் உரை ஆகியன மட்டும், அவைக்குறிப்பில் ஏற வேண்டும் எனும் தீர்மானத்தையும், அதேபோல, இங்கே அச்சிட்ட பகுதிகளுக்கு மாறாக கவர்னர் இணைத்து, விடுத்து படித்த பகுதிகள் இடம் பெறாது என்னும் தீர்மானத்தையும் முன்மொழிகிறேன். இத்தீர்மானத்தை பேரவை ஒருமனதாக நிறைவேற்ற வேண்டுமென்று கேட்டுக் கொள் கிறேன். இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினார். முதலமைச்சர் இந்த தீர்மானத்தை படித்து கொண்டிருந்த போது பாதியிலேயே கவர்னர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.