அங்கன்வாடி மையங்களில் உள்ள 1 முதல் 2 வயது வரையிலான யயயயயயயயயயயயயயயயயயயயயயயய வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ஷம்பு கல்லோலிகர் வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
நிபுணர் குழுவின் பரிந்துரையின்படி, 6 மாதம் முதல் 6 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு தாய்ப்பாலுக்கு பதிலாக தரப்படும் சத்து மாவு மற்றும் பேறு காலத்துக்கு முற்பட்ட அல்லது பிற்பட்ட தாய்மார்களுக்கு தரப்படும் சத்துமாவு ஆகியவற்றில் அடங்கியுள்ள உணவு சேர்க்கையில் மாற்றம் கொண்டு வரப்பட வேண்டும் என்று அரசுக்கு ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி சேவை திட்ட இயக்குநர் கடிதம் எழுதினார். மேலும், 2 வயது முதல் 6 வயது வரையுள்ள மிகுந்த ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கு சத்துமாவுடன் செறிவூட்டப்பட்ட பிஸ்கட்கள் வழங்கவும், 1 முதல் 2 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு கூடுதலாக முட்டைகள் வழங்கவும் நிபுணர் குழு அறிவுறுத்தியதாக தெரிவித்துள்ளார்.
இந்த கோரிக்கையை அரசு கவனமுடன் பரிசீலித்தது. நிபுணர் குழுவின் பரிந்துரைப்படி, 6 மாதம் முதல் 6 வயதுள்ள குழந்தைகளுக்கான சத்துமாவில் சேர்க்கக்கூடிய உணவில் மாற்றங்கள் கொண்டு வரவும்; பேறு காலத்துக்கு முற்பட்ட மற்றும் பிற்பட்ட தாய்மார்களுக்காக தயாரிக்கப்படும் சத்துமாவில் சேர்க்கப்படும் உணவு வகைகளில் மாற்றம் கொண்டு வரவும் அனுமதித்து அரசு உத்தரவிடுகிறது. இந்த உணவு வகைகளை டெண்டர் மூலம் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி சேவை திட்ட இயக்குநர் வாங்கிக்கொள்ளலாம். அந்த உணவை குழந்தைகள் முழுமையாக உட்கொள்கிறார்களா? என்பதை கண்காணிக்க வேண்டும்.
செறிவூட்டப்பட்ட பிஸ்கட்களை 25 செறிவூட்டப்பட்ட உணவு உற்பத்திக்கான பெண்கள் தொழில் கூட்டுறவு சங்கங்கள் மூலம் கொள்முதல் செய்யப்பட வேண்டும். அந்த பிஸ்கட்களில் சேர்க்கப்பட வேண்டிய சத்துகளின் அளவையும், எந்தெந்த வயதுள்ள குழந்தைகளுக்கு எவ்வளவு அளவில் பிஸ்கட்களை கொடுக்க வேண்டும் என்பதையும் அரசு அறிவித்துள்ளது. அதுபோல அங்கன்வாடி மையங்களில் உள்ள 1 முதல் 2 வயது வரையிலான குழந்தைகளுக்கு வாரத்துக்கு கூடுதலாக 2 முட்டைகளை வழங்க வேண்டும்.
6 மாதம் முதல் 6 வயது வரையிலான குழந்தைகளுக்கு, 100 சதவீதம் ஊட்டச்சத்து அளிக்கும், வறுக்கப்பட்ட கோதுமை மாவு, பார்லி மாவு கலந்த கேழ்வரகு மாவு, கொழுப்பு நிறைந்த சோயா மாவு, வெல்லம், வறுத்து அரைத்த நிலக்கடலை மாவு, வைட்டமின் மற்றும் மினரல் கலவை ஆகியவை சேர்த்து வழங்க ஒப்புதல் அளிக்கப்படுகிறது. பேறு காலத்திற்கு முன்னும், பின்னும் தாய்மார்களுக்கு வறுத்த கோதுமை, கடலை பருப்பு, உளுந்து, வேர்க்கடலை மாவுகள், சுத்திகரிக்கப்பட்ட காய்கறி எண்ணெய், பார்லி கலந்த கேழ்வரகு மாவு, கொழுப்பு நிறைந்த சோயா மாவு, வெல்லம், வைட்டமின் மற்றும் மினரல் கலவை ஆகியவை இணைந்த கலவை வழங்க ஒப்புதல் அளிக்கப்படுகிறது.
இந்த சத்துமாவை ஏலக்காய், ஸ்ட்ராபெர்ரி, வென்னிலா, கோ கோ என்பதில், ஏதாவது 2 வகை நறுமணத்துடன் 2 முதல் 6 வயது குழந்தைகளுக்கு வழங்க வேண்டும். செறிவூட்டப்பட்ட பிஸ்கட்டில், கோதுமை மாவு, மைதா, நிலக்கடலை, கேழ்வரகு மாவு, காய்கறி எண்ணெய், சர்க்கரை, வைட்டமின் மற்றும் மினரல்கள், பேக்கிங் பவுடர் ஆகியவை உள்ளதாக இருக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.