Take a fresh look at your lifestyle.

அகில இந்திய போலீஸ் துப்பாக்கிச்சுடும் போட்டி: மாநில அளவில் முதலிடம் பிடித்த தமிழக அணிக்கு முதல்வர் வெற்றி கோப்பை

41

அகில இந்திய போலீஸ் துப்பாக்கிச்சுடும் போட்டியில் மாநில அளவில் முதலிடம் பிடித்த தமிழ்நாடு அணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெற்றி கோப்பையை வழங்கி பாராட்டினார்.

23வது அகில இந்திய போலீஸ்துறை துப்பாக்கிச்சுடும் போட்டி சென்னையை அடுத்த ஒத்திவாக்கத்தில் கடந்த 9ந்தேதி முதல் நடைபெற்றது. 11 ஆண்டுகளுக்கு பின்னர் தமிழகத்தில் நடந்த இந்த போட்டியில் 32 அணிகள் பங்கேற்றன. தமிழ்நாடு போலீஸ் அணி சார்பில் 30 வீரர்கள் போட்டியில் பங்கேற்றனர். 13 பிரிவுகளில் போட்டிகள் நடந்தது. இந்த போட்டிகள் நேற்றுமுன்தினம் நிறைவடைந்தன. கைத்துப்பாக்கி சுடுதல் போட்டியில் 207 புள்ளிகளை பெற்று முதலிடத்தை பிடித்து தமிழ்நாடு போலீஸ்காரர் சதி சிவனேஷ் வெற்றி வாகை சூடினார். முதல்முறையாக தமிழ்நாடு போலீஸ்துறைக்கு இந்த கவுரவம் கிடைத்துள்ளது. மாநிலங்களுக்கு இடையிலான போட்டியில் தமிழ்நாடு போலீஸ் அணி முதலிடம் பிடித்து சாதனை படைத்தது. 2-வது இடத்தை ராஜஸ்தான் போலீஸ் அணியும், 3-வது இடத்தை ஒடிசா போலீஸ் அணியும் பெற்றன. 5 ஆண்டுகளுக்கு பின்னர் தமிழ்நாடு போலீஸ் அணிக்கு இந்த பெருமை கிடைத்துள்ளது. தமிழக வீரர்கள் 2 வெள்ளி, 2 வெண்கல பதக்கங்களை பெற்றனர்.

ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை அசாம் ரைபில்ஸ் அணி பெற்றது. தமிழ்நாடு போலீஸ் அணி 2வது இடத்தை பிடித்தது. இது தமிழக போலீஸ்துறை வரலாற்றில் முதல் நிகழ்வாகும். வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசு வழங்கும் கோலாகல விழா சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு மைதானத்தில் நேற்று மாலை நடைபெற்றது. இதையொட்டி இந்த மைதானம் கொடி, தோரணங்கள் கட்டப்பட்டு களைகட்டியது.

இந்த விழாவில் பங்கேற்பதற்காக ராஜரத்தினம் விளையாட்டு மைதானத்துக்கு வந்த மு.க.ஸ்டாலினை குதிரைப்படை போலீசாரும், போக்குவரத்து போலீசாரும் வரவேற்று அழைத்து வந்தனர். மைதானத்துக்குள் வந்து இறங்கியதும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு தமிழக அரசின் உள்துறை கூடுதல் தலைமை செயலாளர் பணீந்திர ரெட்டி பூங்கொத்து வழங்கி வரவேற்றார். மேலும் போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு, சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உள்ளிட்ட உயர் போலீஸ் அதிகாரிகளும் அவரை வரவேற்றனர். மற்ற மாநிலங்களில் இருந்து வந்திருந்த உயர் போலீஸ் அதிகாரிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு டி.ஜி.பி. சைலேந்திரபாபு அறிமுகம் செய்து வைத்தார். பின்னர் நடைபெற்ற போலீஸ் அணிவகுப்பு மரியாதையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்றுக்கொண்டார்.

பின்னர் வெற்றி பெற்ற வீரர்கள் மற்றும் அணிகளுக்கு கோப்பைகளையும், பதக்கங் களையும் பரிசாக வழங்கி ஸ்டாலின் பாராட்டினார். கைத்துப்பாக்கிச்சுடும் போட்டியில் முதலிடத்தை பிடித்து சாதனை படைத்த சதி சிவனேசுக்கு வெற்றி கோப்பையை பரிசாக வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்தார். ஒட்டுமொத்த சாம்பியன் பிரிவில் 2-வது இடம் பிடித்த தமிழ்நாடு போலீஸ் அணிக்கு கோப்பையை வழங்கி மு.க.ஸ்டாலின் பாராட்டினார். மாநிலங்களுக்கு இடையிலான போட்டியில் முதலிடம் பிடித்த தமிழ்நாடு போலீஸ் அணியினரும் மு.க.ஸ்டாலினிடம் பரிசு பெற்றனர்.

வெற்றி வாகை சூடிய இதர அணிகள் மற்றும் வீரர்களுக்கும் பதக்கங்களை வழங்கி மு.க. ஸ்டாலின் பாராட்டு தெரிவித்தார். பின்னர் அகில இந்திய போலீஸ் துப்பாக்கிச்சுடும் போட்டி நிறைவு பெற்றதற்கான அறிவிப்பை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

விழாவின் தொடக்கத்தில் டி.ஜி.பி.சைலேந்திரபாபு வரவேற்று பேசும்போது, துப்பாக்கிச் சுடும் போட்டி சிறப்பாக நடைபெறுவதற்கு அனைத்து உதவிகளையும் செய்த முதல மைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தார். மத்திய உளவுப்பிரிவு கூடுதல் இயக்குனர் ரவிச்சந்திரன் விழாவில் சிறப்புரையாற்றினார். செயலாக்க பிரிவு கூடுதல் டி.ஜி.பி. பாலநாக ஜோதி நன்றி தெரிவித்தார். இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு உள்ளிட்டோரும் விழாவில் பங்கேற்றனர். ஏராளமான உயர் போலீஸ் அதி காரிகளும், போலீஸ் குடும்பத்தினரும் விழாவை பார்வையிட்டனர்.