சென்னையில் நடக்கும் 23வது அகில இந்திய காவல்துறை துப்பாக்கி சுடும் போட்டியில் 2வது நாளான இன்று மாநிலங்கள் அளவில் தமிழ்நாடு காவல்துறை வீரர்கள் 2வது இடத்தை பிடித்து தமிழக காவல்துறைக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
23 வது அகில இந்திய காவல் துறை துப்பாக்கி சுடுதல் போட்டியை சென்னை, வன்டலூரில் உள்ள காவல் உயர் பயிற்சியக கவாத்து மைதானத்தில் டிஜிபி சைலேந்திர பாபு நேற்று தொடங்கி வைத்தார். இப்போட்டிகள் ஜனவரி 13 வரை செங்கல்பட்டு மாவட்டம், ஒத்தி வாக்கத்தில் உள்ள தமிழ்நாடு காவல் துறை அதிரடிப்படை துப்பாக்கி சுடும் பயிற்சி மைதா னத்தில் நடைபெறுகிறது. 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் காவல் துறையினர், மத்திய காவல் அமைப்பினர் என சுமார் 700 துப்பாக்கி சுடும் வீரர்கள் பல்வேறு பிரிவுகளில் போட்டியிடுகிறார்கள். ஆண்கள் மற்றும் பெண்களுக்கென தனித்தனியாக போட்டிகள் நடத்தப்படுகின்றன.
போட்டியின் இரண்டாவது நாளான இன்று 200 கஜம் நீலிங் ரைபில் சுடும் பிரிவில் பயிற்சி எண் 2 எல்லைப் பாதுகாப்பு படைவீரர் திருராம் நிவாஸ் முதல் இடத்தையும், ஒடிசா காவல் துறையைச் சார்ந்த அகையா குசாஹானி 2வது இடத்தையும், ராஜஸ்தான் காவல் துறை யைச் சார்ந்த ஜிதேந்திரா மூன்றாவது இடத்தையும் பிடித்தனர். 300 கஜம் புரோன் ரைபில் சுடும் பிரிவில் பயிற்சி எண் 3 சி.ஆர்.பி.எப் வீரர் ரசிகாந்த் குமார் முதல் இடத்தையும், அசாம் ரைபில் வீரர் டாடு ஹீபா 2வது இடத்தையும், சி.ஆர்.பி.எப் வீரர் ராம் சுவருப் 3வது இடத்தையும் பிடித்தனர்.
40 கஜம் 30 கஜம் ரன் மற்றும் ஷூட் அட்டாக் கைத்துப்பாக்கி சுடும் போட்டியில் ஐடிபீ.பி வீரர் உம்மத் குமார் முதல் இடத்தையும், தமிழ்நாடு காவல்துறை வீரர்கள் ஆர். சதிசிவனேஷ் 2வது இடத்தையும், யு.சுந்தரபாண்டி மூன்றாவது இடத்தையும் பிடித்தனர். 50 கஜம் ஸ்னாப் சுடுதல் புரோன் பொசிசன் கைத்துப்பாக்கி சுடும் போட்டியில் ஐடிபீ.பி வீரர் பீபின் சிங் முதல் இடத்தையும், எல்லைப் பாதுகாப்பு படைவீரர் ரவீந்தர் குமார் இரண்டாவது இடத்தையும், தெலுங்கானா காவல்துறையைச்சார்ந்த ஆய்வாளார் ஜி.செய்டுலு மூன்றாவது இடத்தையும் பிடித்தனர்.
ஒட்டுமொத்த துப்பாக்கி சுடுதல் பிரிவில் தமிழ்நாடு காவல்துறை வீரர்கள் ஆர். சதிசிவனேஷ் முதல் இடத்தையும், ஆய்வாளர் எம். செல்வராஜ் ஆறாம் இடத்தையும், யு. சுந்தரபாண்டி எட்டாவது இடத்தையும் பிடித்தனர். மேலும் நடைபெற்று முடிந்த போட்டிகளில் மாநிலங்கள் அளவில் தமிழ்நாடு காவல்துறை வீரர்கள் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளனர். இப்போட்டிகள் வரும் 12ஆம் தேதி வரை நடைபெறுகிறது.