Take a fresh look at your lifestyle.

அகில இந்திய காவல்துறை துப்பாக்கி சுடும் போட்டி: வெற்றி பெற்றவர்களுக்கு டிஜிபி சைலேந்திரபாபு பதக்கம்

101

23வது அகில இந்திய காவல்துறை துப்பாக்கி சுடும் போட்டியில் வெற்றி பெற்ற காவல் அதிகாரிகளுக்கு டிஜிபி சைலேந்திரபாபு பதக்கங்கள், சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

23வது அகில இந்திய காவல்துறை துப்பாக்கி சுடுதல் போட்டிகள் 9ம் தேதி முதல் 13ம் தேதி வரை சென்னையை அடுத்த ஒத்திவாக்கத்தில் உள்ள காவல்துறை அதிரடிப்படை மைதானத்தில் நடந்து வருகிறது. போட்டியின் தொடக்கவிழாவை வண்டலூரிலுள்ள காவல் உயர்பயிற்சியக கவாத்து மைதானத்தில் டிஜிபி சைலேந்திரபாபு நேற்று (9.1.2023) தொடங்கி வைத்தார்.

33 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் காவல்துறையினர், மத்திய காவல் அமைப்பினர் என சுமார் 700 துப்பாக்கி சுடும் வீரர்கள் பல்வேறு பிரிவுகளில் போட்டியி டுகிறார்கள்.

 

போட்டியின் முதல் நாளான இன்று 100 மீட்டர் ரைபிள் சுடும் பிரிவில் அசாம் காவல் துறை யின் அவில்தார் அபூர்வா தபில்தார் முதலிடத்தையும், எல்லை பாதுகாப்பு படை வீரர் டோய்மரி 2வது இடத்தையும், இந்தோ திபெத்திய எல்லை பாதுகாப்பு படை வீரர் அமித் பரமன் 3வது இடத்தையும் பிடித்தனர். மேலும் 15 கஜம்,  ஆண்கள் கைத்துப்பாக்கி  சுடும் போட்டியில் அசாம் ரைபில்ஸ் இம்னோக் யான்சு, சி.ஆர்.பி.எப். வீரர் சுரேஷ் மாலி, ஒடிசா மாநில இன்ஸ்பெக்டர் மானஸ் பாண்டா ஆகியோர் வெற்றி பெற்றனர்.

மேலும் 25 கஜம், ஆண்கள் கைத்துப்பாக்கி சுடும் போட்டியில் அசாம் ரைபில்ஸ் வீரர்கள் கணேஷ் குமார், தமி, தமிழக காவலர் சதீஷ் வனேஷ் ஆகியோர் 1,2,3வது இடங்களை பிடித்து வென்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு பதக்கங்களை வழங்கி கவுரவித்தார். முன்னதாக துப்பாக்கிச் சுடும் மைதானத்தின் நுழைவு வாயிலில் புதிதாக கட்டப்பட்டுள்ள முகப்பு வளைவை டிஜிபி சைலேந்திரபாபு திறந்து வைத்தார்.